ரூ.50 ஆயிரம் நிதியுதவி… தீபாவளிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லெஜெண்ட் சரவணன்!

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி மற்றும் அவரது கணவர், கடந்த நான்கு மாதங்களாக முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் உதவித்தொகை கிடைக்காததால், தங்களது நிலை குறித்து தனலட்சுமி சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுகளைக் கவனித்த நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன், உடனடியாகத் தனது நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு அந்தக் குடும்பத்துக்கு உதவ ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி, அவரது சார்பில் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டதுடன், தீபாவளிப் பரிசாக தனலட்சுமிக்கு புடவையும், அவரது கணவருக்கு வேட்டி, சட்டையும் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்துப் பேசிய அகில இந்திய லெஜெண்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைவர் T. முத்துதுரை, முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கும் குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் விரைந்து உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே, சென்னையில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது இப்ராஹிமின் குடும்பத்தினருக்கும் லெஜெண்ட் சரவணன் உதவிக்கரம் நீட்டியிருந்தார். கடன் சுமை மற்றும் பொருளாதார நெருக்கடியில் தவித்த அவரது குடும்பத்தினருக்கு, அகில இந்திய லெஜெண்ட் சரவணன் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் அதன் தலைவர் T. முத்துதுரை ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கியிருந்தார்.
சமூக வலைதளப் பதிவு மூலம் கவனத்துக்கு வந்த குடும்பத்துக்கு நிதியுதவி மற்றும் தீபாவளிப் பரிசுகளை வழங்கிய லெஜெண்ட் சரவணனின் செயல் தற்போது கவனம் பெற்று வருகிறது.
