குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என நம்பிக்கை தெரிவித்த சூர்யா!

Web Ads

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை திருவிழாவாக மாற்றினர்.

இந்த விழாவில் நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லூரி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகை மமீதா பைஜூ, தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்ஷீ, பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு திரைப்படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், “‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஒரு உணர்வுபூர்வமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். ரசிகர்கள் மட்டுமல்ல, குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது” என்றார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி, “இந்த படம் சூர்யாவுக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுக்கும். காதல், குடும்பம், நகைச்சுவை, உணர்வுகள் என அனைத்தும் கலந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இது இருக்கும். முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வர வேண்டும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகை மமீதா பைஜூ, “சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இந்த படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாத ஒன்று. படப்பிடிப்பு தளத்தில் அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.

Web Ad 2

நடிகர் சூர்யா தனது உரையில், கோவை தனது சொந்த மண் என்பதால் இங்குள்ள நினைவுகளை பகிர்ந்து கொண்டார். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற முக்கியமான செய்தியையும் ரசிகர்களிடம் பகிர்ந்த அவர், “டிஜிட்டல் உலகில் மூழ்கி விடாமல், குடும்பத்துடன் நினைவுகளை உருவாக்குங்கள். அதுதான் வாழ்க்கையின் உண்மையான செல்வம்” என்று உருக்கமாக பேசினார்.

மேலும், “‘விஸ்வநாத் & சன்ஸ்’ எனக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்த படம். ரொமான்ஸ், குடும்பம், காமெடி, ஹீரோயிசம் என அனைத்தும் கலந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மிகவும் பிடிக்கும்” என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

நண்பர்கள் தின வாழ்த்துகளை தெரிவித்து தனது உரையை நிறைவு செய்த சூர்யா, “நம்பிக்கையுடன் பயணித்தால் வெற்றி நிச்சயம். அனைவரும் வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.