சொர்க்கவாசல் திரை விமர்சனம்
ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘சொர்க்கவாசல்’ படம் படியேறிப் பார்க்கலாமா?: திரை விமர்சனம்
காமெடி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த ஆர்.ஜே.பாலாஜி, கதாநாயகனாக பரிணாமம் பெற்று, அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ‘சொர்க்கவாசல்’ என்ற திரைப்படத்தில் நடித்து தற்போது வெளியாகியிருக்கிறது.
இப்படம், 1999-ம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் ‘ஜெயிலர்’ எரித்துக் கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. இனி, இத்திரைப்படம் குறித்த விமர்சனத்திற்கு வருவோம்..
பார்த்திபன் (என்ற ஆர்.ஜே. பாலாஜி) கையேந்தி பவன் வைத்து பிழைப்பை நடத்தி வருகிறார். காதலித்த பெண்ணை கரம் பிடித்து சந்தோஷமாய் வாழ நினைக்கிறார்.
இந்நிலையில், இவர் செய்யாத குற்றத்திற்காக சிறைக்குச் செல்ல நேரிடுகிறது. சிறையில் பல சோதனைகளுக்கு உட்பட்டு, அப்பாவியாய் பரிதவிக்கிறார்.
இதனிடையே தாதா சிவா (என்ற செல்வராகவன்) சிறைச்சாலையையே தனது ரவுடித்தனத்தால் தனக்கேற்ப கட்டுப்படுத்தி வீராப்புடன் உலா வருகிறார்.
இந்நிலையில், புதிதாக வரும் ஜெயிலர், தாதா சிகாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுக்கிறார்.
இச்சூழலில், பார்த்திபனுக்கு ஓர் உண்மை தெரிய வருகிறது. அதாவது, தான் சிறைக்கு வரக் காரணமே தாதா சிகாதான் என அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும், சிகாவை எதிர்க்க முடியாது இயலாமையால் தவிக்கிறார்.
ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக ‘தாதா’ சிவா இறந்து விட, இதற்கு காரணம் புதிதாக வந்த ஜெயிலர்தான் என சிகாவின் ஆட்களால் சிறைக்குள் பெரிய கலவரம் ஏற்படுகிறது.
இதில், ‘தாதா’ சிகாவின் ஆட்களால் ஜெயிலர், கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். பின்னர் என்ன நிகழ்கிறது என்பதே மீதிக் கதை.
முதல் பாதியை விட, இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. கருணாஸ் வெகு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறைக்குள் படபடக்கும் துயரத்தை விவரிக்கும் கதை என்பதால், கதாநாயகி சானியா ஐயப்பனுக்கு படத்தில் வேலையில்லை.
ஹீரோயிசம் தெரியாத சாமானிய மனிதனாக அங்கலாய்த்து, தனது மாறுபட்ட நடிப்பினால் ஆர்.ஜே.பாலாஜி ஏதோ கவனத்தை ஈர்க்கிறார். இன்னும் தேர்ச்சி தேவை. காட்சிதோறும் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் சிறப்பாக இணைந்திருக்கிறது.
‘சிறைக்குள்ளேயும் அரசியல் கட்சிகளின் வண்ணங்கள் ஆக்கிரமிக்கின்றன; கோலோச்சுகின்றன. இதை தவிர்க்கவே முடியாது தானோ..!’ என்கிற கோணத்தில் காட்சிப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்க ஆக்கம்.
முதல் பாதியிலும் நேர்த்தியான திரைக்கதை கொடுக்கப்பட்டிருந்தால் ‘சொர்க்கவாசல்’ சுகமாகியிருக்கும். இருப்பினும் ஆர்.ஜே. பாலாஜியை வைத்துக்கொண்டு, ஆகச் சிறந்த படைப்பைச் செதுக்க முயற்சி செய்த இயக்குனர் சித்தார்த் பாராட்டுக்குரியவர்.
மொத்தத்தில்.. ரொமான்ஸ், பேண்டஸி ஃபார்முலா, கிராஃபிக்ஸ், ஹீரோயிசம், பிரம்மாண்டம் என கலர் கலராய் பிதற்றாமல் தில்லாக திரில்லராய் இருக்கிறது.
சொர்க்கவாசல் திரை விமர்சனம்
- Rating