“‘ஹபீபி’ மூலம் கிடைத்த அனைத்து அங்கீகாரத்திற்கும் காரணம் இயக்குநர் மீரா கதிரவன்தான்!” – இளம் நடிகர் ஈசா நெகிழ்ச்சி

Web Ads

‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இளம் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள ஈசா, தனது வெற்றிப் பயணம், திரையுலக அனுபவம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

முதல் படத்திலேயே ரசிகர்களின் வரவேற்பு, விமர்சகர்களின் பாராட்டு மற்றும் திரையுலக பிரபலங்களின் அங்கீகாரம் ஆகியவற்றைப் பெற்றுள்ள ஈசா, அந்த வெற்றிக்கான முழுப் பெருமையையும் இயக்குநர் மீரா கதிரவனுக்கே அர்ப்பணித்துள்ளார்.

மதுரையிலிருந்து தமிழ் சினிமா வரை…

மதுரையைச் சேர்ந்த ஈசா, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வரும் மாணவர். தேசிய அளவிலான தடகள வீரரான அவர், விளையாட்டில் கற்ற ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் விடாமுயற்சியையே தனது நடிப்புப் பயணத்திலும் பின்பற்றியதாக கூறுகிறார்.

திரைப்படத் துறையில் தனது பயணத்தை, தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா இயக்கத்தில் நடிகர் அமீர் நடித்த ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதன் மூலம் தொடங்கியுள்ளார்.

“திரைப்படம் எப்படி உருவாகிறது, ஒரு காட்சியை எப்படி வடிவமைக்கிறார்கள், நடிகர்களிடமிருந்து இயக்குநர் எப்படி நடிப்பை வெளிக்கொண்டு வருகிறார் என்பதை நேரில் கற்றுக்கொண்டேன். அந்த அனுபவம்தான் இன்று ஒரு நடிகராக என்னை உருவாக்கியது” என்கிறார் ஈசா.

‘ஹபீபி’ எப்படி கிடைத்தது?

இயக்குநர் அஸ்லம் மூலம், ‘ஹபீபி’ படத்திற்கான ஆடிஷன் குறித்து அறிந்த ஈசா, தேர்வில் பங்கேற்றார். ஆடிஷனுக்குப் பிறகு ஆறு மாதங்கள் எந்த தகவலும் இல்லாத நிலையில், ரிகர்சலுக்கான அழைப்பு வந்தபோதுதான் கதாநாயகனாக தேர்வானது உறுதியானதாக அவர் நினைவுகூர்கிறார்.

“முதல் நாளிலிருந்தே இயக்குநர் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதையே இலக்காக வைத்தேன். ஒவ்வொரு நாளும் முழு அர்ப்பணிப்புடன் படப்பிடிப்புக்கு சென்றேன்” என்று கூறுகிறார்.

கதாபாத்திரத்திற்காக 20 கிலோ வரை உடல் எடை மாற்றம்

‘ஹபீபி’ படத்தில் மூன்று வெவ்வேறு வயது மற்றும் மனநிலைகளில் வரும் கதாபாத்திரத்தை ஏற்றிருந்த ஈசா, அதற்காக தனது உடல் எடையை பலமுறை மாற்றியுள்ளார்.

Web Ad 2

முதலில் உடல் எடையை குறைத்து, பின்னர் சுமார் 20 கிலோ வரை அதிகரித்து, மீண்டும் குறைத்து நடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு கதாபாத்திரம் உண்மையாகத் தோன்ற வேண்டும் என்றால் நடிகரும் அதற்கேற்ப மாற வேண்டும். அதற்காக முழுமையாக என்னை அர்ப்பணித்தேன்” என்று கூறுகிறார்.

திரையுலக பிரபலங்களின் பாராட்டு

‘ஹபீபி’ திரைப்படத்தை பார்த்த இயக்குநர்கள் மாரி செல்வராஜ், சுதா கொங்கரா, பாலாஜி சக்திவேல், அமீர், சேரன், சசிகுமார், வெற்றிமாறன், மிஷ்கின், சீனு ராமசாமி, மகிழ் திருமேனி, பா. ரஞ்சித், நாசர், பி.சி. ஸ்ரீராம் உள்ளிட்ட பலர், ஈசாவின் இயல்பான நடிப்பு, உடல்மொழி, குரல் மாற்றம் மற்றும் கதாபாத்திரத்திற்காக எடுத்த அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளனர்.

“என் வெற்றிக்கான முழுப் பெருமை மீரா கதிரவனுக்கே”

தனது வெற்றிக்கு காரணம் குறித்து பேசிய ஈசா,

“‘ஹபீபி’ மூலம் எனக்குக் கிடைத்த அனைத்து அங்கீகாரத்திற்கும், பாராட்டுகளுக்கும், புகழுக்கும் முழுச் சொந்தக்காரர் என் இயக்குநர் மீரா கதிரவன்தான். ஒரு புதுமுக நடிகரை நம்பி இவ்வளவு வலுவான கதாபாத்திரத்தை கொடுத்து, என்னுள் இருந்த திறமையை வெளிக்கொண்டு வந்தவர் அவர்தான். இந்த வெற்றிக்கான முழுப் பெருமையும் அவருக்கே சேரும். இனி நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவர் வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவதே என் பொறுப்பு” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக இரண்டு புதிய படங்கள்

‘ஹபீபி’ வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இரண்டு புதிய திரைப்படங்களில் கதாநாயகனாக ஈசா ஒப்பந்தமாகியுள்ளார். அந்த இரண்டு படங்களும் வணிக அம்சங்களுடன் சமூக கருத்துகளையும் பேசும் படங்களாக உருவாகி வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் தரமான படங்களுக்கு வெளியீட்டுக்கு முன்பே உரிய ஆதரவு கிடைக்க வேண்டும் என்றும், அது தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இறுதியாக, நடிகராக மட்டுமல்லாமல், ஒரு விளையாட்டு வீரராகவும் தொடர்ந்து அறியப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், “நல்ல கதைகள், நல்ல கதாபாத்திரங்கள், நல்ல சினிமா – அதுவே என் அடுத்த இலக்கு” என்று நம்பிக்கையுடன் தனது உரையாடலை நிறைவு செய்தார்.