மன அமைதியும் ஆரோக்கியமும்தான் முக்கியம் – சூர்யா பகிர்ந்த வாழ்க்கை அனுபவம்

Web Ads

தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வினீத் அகஸ்டின் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தை 2D என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சூர்யா – ஜோதிகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயஸ்ரீ தாமோதரன், ராஜசேகர் பாண்டியன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் படக்குழுவினர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ராஜசேகர் பாண்டியன் பேசுகையில்,

சூர்யாவை இந்தப் படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் பார்க்கப் போகிறீர்கள். காமெடி, திரில்லர், காதல் என அனைத்து அம்சங்களும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘சீன்’ உருவாகியுள்ளது. நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 2D என்டர்டெய்ன்மென்ட் இதுவரை 15 திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இளம் தலைமுறையினருக்கும் புதிய திறமையாளர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

ஜெயஸ்ரீ தாமோதரன் பேசுகையில்,

நல்ல படைப்புகளை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கனவின் தொடக்கம்தான் ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ‘சீன்’ திரைப்படம். இயக்குநர் ஜித்து மாதவன் உள்ளிட்ட கேரளாவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் சென்னையில் ஓராண்டு தங்கி அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் திறமையான இளம் கலைஞர்களுக்கும் இப்படத்தில் வாய்ப்பளித்துள்ளோம். இந்தப் படம் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் என நம்புகிறோம் என்றார்.

விநியோகஸ்தர் சக்தி வேலன் பேசுகையில்,

சூர்யா அண்ணாவின் வழியில், அவருடைய ஆதரவுடன் தான் என்னுடைய திரைப்பயணம் வளர்ந்தது. ‘சிங்கம் 2’ படத்தைத் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்தபோது, எனது உழைப்பைப் பாராட்டி சூர்யா ரூ.10 லட்சம் பரிசாக வழங்கினார். இன்று 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை விநியோகம் செய்துள்ளோம்.

சூர்யா தொடர்ந்து நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார். ஆனால், அவர் செய்யும் நல்ல செயல்களைக்கூட சிலர் அரசியலுடன் தொடர்புபடுத்திப் பேசுகிறார்கள். சூர்யாவைப் பொறுத்தவரை அவரது தலையே அவருக்குக் கிரீடம்.

‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படங்களைத் தொடர்ந்து ‘சீன்’ திரைப்படமும் வெற்றிபெறும் என நம்புகிறேன். இது ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர் காமெடி திரைப்படம். இரண்டாம் பாதியில் ஐந்துக்கும் மேற்பட்ட தியேட்டரிக்கல் மொமெண்ட்ஸ் உள்ளன என்றார்.

நடிகை நஸ்ரியா நஜீம் பேசுகையில்,

12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடித்துள்ளேன். இதற்கு முக்கியக் காரணம் சூர்யாதான். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகியுள்ளது. தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து எனக்கு அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் ‘சீன்’ திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில்,

Web Ad 2

தீபாவளி வெளியீடு எப்போதுமே நமக்கு ஸ்பெஷலானது. ‘காக்க காக்க’ திரைப்படத்தில் சூர்யா அறிமுகமாகும் காட்சிக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை நேரில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு ‘பிதாமகன்’, ‘ஆய்த எழுத்து’ என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில் வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படங்களிலும் அவருடைய நடிப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. தற்போது ‘சீன்’ படத்தின் மூலம் இயக்குநர் ஜித்து மாதவன் யாரும் எதிர்பார்க்காத வகையில் டார்க் ஹியூமர் கலந்த ஒரு புதிய பொழுதுபோக்குத் திரைப்படத்தைக் கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமை ‘இசை சித்தர்’ என்று அழைக்கலாம் எனத் தோன்றுகிறது. இயக்குநர் ஜித்து மாதவன் எப்போதும் அமைதியாக இருப்பார். ஆனால், படத்தில் பட்டாசாக வெடித்திருக்கிறார் என்றார்.

நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில் சூர்யா பேசுகையில்,

திரையுலகில் அறிமுகமாகி 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளாக ரசிகர்கள் என் மீது காட்டி வரும் அன்பு குறையவில்லை. ரசிகர்களின் அன்புதான் இந்த மேடையை அழகாக்கியுள்ளது.

நற்பணி மன்றம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை மற்றவர்களுக்காக நாம் நிரூபிக்க வேண்டியதில்லை. மற்றவர்கள் என்ன பேசினாலும் அதை எதிர்த்துப் பேச வேண்டாம் என்று நான் கூறியதை ஏற்று ரசிகர்கள் தொடர்ந்து அன்பைப் பகிர்ந்து வருகின்றனர். 500 நன்கொடையாளர்களுடன் தொடங்கிய ரத்த தானப் பணி, தற்போது ஆண்டுக்கு 5,000 நன்கொடையாளர்கள் ரத்த தானம் வழங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

எங்களுடைய ரசிகர்கள் ஒரு குடும்பமாகச் செயல்படுகிறார்கள். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் அந்தக் குடும்பத்தில் இருக்கிறார்கள். தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

ஜித்து மாதவனின் ‘ரோமான்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை நானும் ஜோதிகாவும் பார்த்து ரசித்தோம். அவர் உருவாக்கும் உலகம் ஒவ்வொன்றும் வித்தியாசமானது. அதேபோல் ‘சீன்’ திரைப்படமும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இந்த ஆண்டு எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படங்களைத் தொடர்ந்து ‘சீன்’ திரைப்படமும் வெளியாகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாகத் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தைப் பார்த்து மகிழுங்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட மனதில் அமைதியும் உடலில் ஆரோக்கியமும் இருக்க வேண்டும் என்பதுதான் இப்போது எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. வாழ்க்கை மீது நம்பிக்கை வையுங்கள். வாழ்க்கை அழகானது. நாம் மூச்சு விடும் வரை எல்லா விஷயங்களையும் மாற்றிக்கொள்ளவும், சரிசெய்துகொள்ளவும் முடியும். மூச்சு விடும் வரை தோல்வி என்பதே இல்லை. எதுவும் முடிவில்லை. எல்லாவற்றையும் சரிசெய்ய இயலும் என்றார்.

மேலும், தனது வாழ்க்கைப் பயணத்தில் துணையாக இருந்து வரும் மனைவி ஜோதிகாவுக்கு நன்றி தெரிவித்த சூர்யா, தனது ரசிகர்களின் அன்பையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இறுதியாக, வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள ‘சீன்’ திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான காமெடி கலந்த ஆக்ஷன் அனுபவத்தை வழங்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.