நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நட்சத்திர பட்டாளம்
‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி.டி.வி. கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பையும், எஸ். கண்ணன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
மூன்று முன்னணி நிறுவனங்கள் இணையும் தயாரிப்பு
Zee Studios, The Rowdy Pictures மற்றும் Seven Screen Studio நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன், எஸ்.எஸ். லலித்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். வினோத் சி.ஜே., கே.எஸ். மயில்வாகனன் இணைத் தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொட்யூசராகவும் பணியாற்றியுள்ளனர்.
ஏற்கனவே ஹிட்டான முதல் பாடல்

படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி, மில்லியன் கணக்கான டிஜிட்டல் பார்வைகளை பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து வெளியான ரிலீஸ் தேதி அறிவிப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
‘வில்லனே இல்லாத ஃபேமிலி என்டர்டெய்னர்’
படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் கூறுகையில்,
“‘ஹாய்’ பெயருக்கு ஏற்றபடி எளிமையான, இனிமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். குடும்பத்துடன் இரண்டரை மணி நேரம் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதை, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘யாரடி நீ மோகினி’ போன்ற வில்லன்களே இல்லாத ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும்.” என்றார்.
பெரும் எதிர்பார்ப்பில் ‘ஹாய்’
‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் பாடலாசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் என்பதாலும், நயன்தாரா – கவின் முதல் கூட்டணி என்பதாலும், ‘ஹாய்’ திரைப்படம் ரசிகர்களிடமும், திரையுலக வட்டாரங்களிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஹாய்’ திரைப்படம் ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.