மனதுக்குள் சிறகடிக்கிறதா? கிறங்கடிக்கிறதா?: ‘பறந்து போ’ திரை விமர்சனம்

Web Ads

குழலினிது, யாழினிது என்பது போல மழலையின் மொழியும் இனிதுதானே. தூறல்களாய் வருடும் மழையின் சிலிர்ப்பு தானே. மழலையின் சேட்டைகளும் மயிலிறகின் தொடுகை அல்லவா. அத்தகு புன்னகைப் படைப்புதான் இது.

அதாவது, குழந்தைகளின் உலகத்திற்கும் பெற்றோர்களின் உலகத்திற்கும் இடையே நடக்கிற உரையாடல்தான் ‘பறந்து போ’ திரைப்படம்.

கற்றது தமிழ், தரமணி, தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களால் கவனம் இருந்த இயக்குநர் ராம், இப்படத்தையும் வடிவமைத்திருக்கிறார் இனி இப்படம் குறித்து காண்போம்…

கோகுல் (சிவா), குளோரி (கிரேஸ் ஆண்டனி) இருவரும் காதல் திருமணம் செய்து, சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்கின்றனர். இவர்களது பொருளாதாரத் தேடலில், தனது மகன் அன்புவை (மிதுன் ரியானை) இருவரும் வீட்டில் தனியாக விட்டுச் செல்கின்றனர்.

ஒரு கட்டத்தில் இன்டர்நெட் உலகில் மூழ்கிக் கிடக்கும் மகனை அழைத்துக்கொண்டு நீண்ட பைக் ரைடுக்கு செல்கிறார் கோகுல். அந்த புதிய பயணத்தில் பல்வேறு மனிதர்களின் சந்திப்புகள் நிகழ்கிறது. இந்த அனுபவம் அவர்களுக்கு எதைப் புரிய வைக்கிறது? அவர்களுக்குள் எத்தகைய மாற்றத்தை உருவாக்குகிறது? என்பதுதான் கதை.

சிவா, குளோரி, அன்பு இந்த மூவரையும் சுற்றியே திரைக்கதை வார்க்கப்பட்டுள்ளது. இதில் சுவாரஸ்யமும் நகைச்சுவையும் இழையோடுகிறது. கோகுலின் அப்பா (பாலாஜி சக்திவேல்), ‘ஸ்கூல் க்ரஸ்’ வனிதா (அஞ்சலி) என அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு வலிமை சேர்த்திருக்கின்றன.

குறிப்பாக, கதையின் நாயகனாக சிவா தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி, மிக தேர்ச்சி பெற்றிருப்பது சிறப்பு. ஒரு சிறுவனாக ‘மாஸ்டர்’ மிதுன் ரியான் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.

ஏகாம்பரம் ஒளிப்பதிவும், சந்தோஷ் தயாநிதி மெட்டும், யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையும் மதன் கார்க்கியின் வரிகளும் உணர்வுப்பூர்வமாக ஒன்றியிருக்கிறது. பாடல்களாலும் கதையோட்டம் பயணிக்கிறது.

இரண்டாம் பாதியில் நகைச்சுவை நிகழ்வுகளாலும் வாழ்வியலை பிரதிபலிக்கும் வசனங்களாலும் ரசிக்க வைக்கிறது. ஹீரோயினியாக நடித்திருக்கும் மலையாள நடிகை கிரேஸின் ஃபெர்பார்மன்ஸ் கிரேஸ்தான்.

இப்படம் குறித்து இயக்குனர் ராம் முன்னதாக தெரிவிக்கையில், ‘நான் சினிமாவுக்கு வந்து இந்த 18 வருடங்களில் தமிழின் முன்னணி நடிகர்களோடு படம் செய்யவே இல்லை. ஆனாலும், இங்கே இன்னமும் நிலைத்து கொண்டுதான் இருக்கிறேன்’ என்றார்.

அவ்வகையில், குடும்ப நெஞ்சங்களில் ‘பறந்து போ’ சிறகடிக்கும். குதூகலிக்கும். ஆம், பெற்றோர்களும் குழந்தைகளும் பறந்து போய் பார்க்க வேண்டிய திரைப்படைப்பு எனலாம்.

parandhu po movie review

90%

'பறந்து போ' திரை விமர்சனம்

  • Rating