ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்திற்காக, இயக்குநர் நெல்சன் வியூகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். ரஜினியை பெரும்பாலும் லைவ் லொகேஷனிலேயே நெல்சன் படமாக்கி வருவதாக சொல்லப்படுகின்றது.
இதேபோல தான் ‘ஜெயிலர்’ படத்தின் பல காட்சிகளை லைவ் லொகேஷனில் படமாக்கினார். அது மிகப்பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகியிருந்தது. அந்த பார்முலாவை தற்போது ஜெயிலர் 2 படத்திலும் பின்பற்றி வருகின்றார்.
படத்தைப் பற்றிய ஏமாற்றங்களை தவிர்க்க, எதிர்பார்ப்புகளை அளவாக வைத்துக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகளை அதிகரிக்க வேண்டாம் என்பதற்காக, படத்தை பற்றி பெரிதாக நான் பேசவில்லை. அளவு கடந்த எதிர்பார்ப்பு, சில சமயங்களில் ஏமாற்றத்தை கொடுத்துவிடும். அதை தவிர்க்க மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ளாதீர்கள் என நெல்சன் சொன்னதாக ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.
முன்னதாக, சூர்யா நடித்த கங்குவா, கமல்ஹாசன் -சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதைத்தொடர்ந்து ரஜினி-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘கூலி’ படமும் மிகப்பெரிய ஹைப்பிற்கு மத்தியில் வெளியாகி ட்ரோல்களை சந்தித்தது.
இப்படங்களை பற்றி ரசிகர்கள் மிகப்பெரிய கற்பனைகளை உருவாக்கி வைத்திருந்தனர். கடைசியில் அவர்களின் எதிர்பார்ப்பை இப்படங்கள் பூர்த்தி செய்யாததால், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
அதையெல்லம் தவிர்க்கவே நெல்சன் இவ்வாறு செய்து வருகின்றார் என கூறப்படுகின்றது. ‘ஜெயிலர்-2’ படத்தில் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்கின்றார் என்றும், மலையாள நடிகர் சுராஜ் மற்றும் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் இந்த பாகத்திலும் நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், இதைப்பற்றி படக்குழு இன்னும் எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
