Pushpa 2

சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி திரைப்படங்களின் ‘பராசக்தி’ டைட்டில் மாறுகிறதா?

எஸ்கே மற்றும் விஜய் ஆண்டனி படங்களின் ‘பராசக்தி’ டைட்டில் விவகாரம் தொடர்பாக, தற்போது வெளியான தகவல் காண்போம்..

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ பட தலைப்பை பயன்படுத்த சிவகார்த்திகேயனும், விஜய் ஆண்டனியும் முனைப்புடன் உள்ளனர்.

இதில் விஜய் ஆண்டனி தன்னுடைய 25-வது படத்திற்காக அந்த டைட்டிலை, கடந்த ஆண்டு ஜூலை மாதமே பதிவு செய்துவிட்டதாக ஆதாரத்தை வெளியிட, பின்னர் ஏவிஎம் நிறுவனம் தாங்கள் ‘பராசக்தி’ என்கிற டைட்டிலை பயன்படுத்தும் உரிமையை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.25 படக்குழு பெற்றிருப்பதாக பதிலுக்கு அறிக்கை வெளியிட்டது.

பின்னர் விஜய் ஆண்டனி தரப்பும், சிவகார்த்திகேயன் தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினைக்கு முடிவு கண்ட நிலையில், சிவாஜி நடித்த ‘பராசக்தி’ படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம், அந்த டைட்டிலை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தற்போது தெரிவித்துள்ளது. இது குறித்து, நேஷனல் பிக்சர்ஸ் உரிமையாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அறிமுகமான, 1952 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பராசக்தி. இந்தத் திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்களுடைய தாத்தா திரு.பெருமாள் முதலியார் அவர்கள்தான் தயாரித்தார். ஏ.வி.எம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது.

அந்தத் திரைப்படத்தில் சிவாஜி அவர்களைக் கதாநாயகனாக நடிக்க வைப்பதை ஏவிஎம் நிறுவனத்தின் ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தார் பெருமாள் முதலியார் அவர்கள் பிடிவாதமாக சிவாஜி அவர்களையே கதாநாயகனாக நடிக்க வைத்தார்.

தன்னுடைய இறுதிக்காலம் வரை, நடிகர் திலகம் சிவாஜி அவர்கள், தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற வகையில், ஒவ்வொரு பொங்கல் நாளன்றும் வேலூர் வந்து பெருமாள் முதலியார் அவர்களிடம் ஆசிபெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தகைய, எங்களின் தாத்தாவுடைய பெருமைமிகு தயாரிப்புதான் “பராசக்தி”.

பொன்விழா, வைரவிழா கண்டிருக்கும் இந்தத் திரைப்படம் நூறாண்டு ஆனாலும் அதன் தாக்கம் குறையாது என்ற அளவிற்கு, அந்தத் திரைப்படத்தின் கலைஞர் அவர்களின் கனல் தெறிக்கும் வசனங்களும், நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் உணர்ச்சிகரமான நடிப்பும், மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

விரைவில் வெள்ளிவிழா (75வது ஆண்டு) காண இருக்கும் வேளையில், பராசக்தி திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நாங்கள் திட்டமிட்டு, அதற்கான பணியைத் தொடங்கவிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிவிப்பதில் பெருமைப்படுகிறோம்.

இந்தத் தருணத்தில், எங்களுக்கு முழு உரிமையான பராசக்தி திரைப்படத்தின் பெயரை வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், சிவகார்த்திகேயன் & விஜய் ஆண்டனி படங்களுக்கு வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்படுவதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!