மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் மெகா ஸ்டார்-429 : தமிழில் ரீமேக் ஆகுமா?
மெகா ஸ்டார்கள் இணைந்து நடிப்பது, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும். அவ்வகையில், தமிழ் சினிமாவில் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோகன் லால் நடித்தார். முன்னதாக, தளபதி படத்தில் மம்முட்டி நடித்திருந்தார்.
அண்மையில் வெளிவந்த வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சன் நடித்தார் என சினிமாவிற்குரிய கமர்ஷியல் வியூகம் விரிந்து போகிறது. இந்நிலையில், மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிப்பது குறித்து பார்ப்போம்..
மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008-ம் வெளியான ‘Twenty:20’ மலையாள படத்தில் மம்மட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாக நடிக்கின்றனர்.
இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இந்தப் படத்துக்காக மம்முட்டி 100 நாட்களும், மோகன்லால் 30 நாட்களும் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் குஞ்சாக்கோ போபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை உறுதி செய்யும் வகையில், மம்முட்டி, மோகன்லால், குஞ்சாக்கோ போபன் மூவரும் இணைந்து எடுத்த புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படத்தில் மம்முட்டி நாயகனாகவும், மோகன்லால் ப்ளாஷ் பேக் காட்சிகளில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் ‘மெகா ஸ்டார் 429’ என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது.
அப்படியே இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுமா என திரை ஆர்வலர்கள் ஆவலாய் கேட்டு வருகின்றனர்.