இளையராஜாவின் பாடல் விவகாரம்: சோனி நிறுவனத்திற்கு கோர்ட் நோட்டீஸ்..

நடிகை வனிதா விஜயகுமார், நடன இயக்குநர் ராபர்ட் நடிப்பில் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற படம் வெளியாகியுள்ளது. இதில், இளையராஜா இசையில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ‘சிவராத்திரி’ என்ற பாடல் இடம்பெற்றது.
தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகஇளையராஜா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், இது காப்புரிமையை மீறிய செயல் என்பதால், அவ்வாறு பயன்படுத்தத் தடை விதி்க்க வேண்டும் என்றார்.
வனிதா விஜயகுமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஸ்ரீதர், ‘இளையராஜாவின் 4 ஆயிரத்து 850 பாடல்களை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளதால், அந்த நிறுவனத்தின் அனுமதி பெற்றே அந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. படத்தில் இடம்பெற்றிருந்த இளையராஜாவின் பெயர் நீக்கப்பட்டு விட்டது’ என்றார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சோனி நிறுவனத்தையும் சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.18-ந்தேதி தள்ளி வைத்தார்.

