தன்னைப் பற்றி வரும் மீம்ஸ், ட்ரோல்களுக்கு சாய் அபயங்கர் பதில்..

பாடகர்கள் திப்பு-ஹரிணியின் மகன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். ‘கட்சி சேர’ ஆல்பத்தின் மூலம் பிரபலமாகி தற்போது அடுத்தடுத்த படங்களின் இசைப்பணியில் பிஸியாகி வருகிறார்.
இது தொடர்பாக ட்ரோல்களும் குவிந்து வருகிறது. அதாவது, அவதார் 4’ படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ‘ராமாயணா’ படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார், கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்தான் என்றெல்லாம் மீம்ஸ் வழியே ‘ட்ரோல்’களைக் கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில், வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ டீசரில் வரும் பின்னணி இசை குறித்தும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தன் மீதான இந்த விமர்சனங்கள் குறித்து சாய் அபயங்கர் கூறுகையில்,
‘கட்சி சேர’ பாடலுக்குப் பிறகு ’பென்ஸ்’ படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தற்போது நான் பெரிய படங்களில் பணியாற்றி வருகிறேன். எனக்கு வரும் வாய்ப்புகள் குறித்து, ஆடியன்ஸே இவ்வளவு யோசிக்கும்போது, தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் எவ்வளவு யோசித்திருப்பார்கள்?
சினிமாத் துறையில் கிட்டத்தட்ட எல்லாருமே எல்லாருக்கும் தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். என்னுடைய இசை, நான் வேலை செய்யும் பாணி ஆகியவை பற்றி அவர்கள் ஒரு பத்து பேரிடம் சொல்வது மூலம்தான் எனக்கு இத்தனை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், இது கடவுளின் திட்டம் என்றும் நான் நம்புகிறேன். மேலும், நான் முன்பே ஒப்பந்தமான பல படங்கள் தற்போது அறிவிக்கப்படுகின்றன’ என்றார். உண்மைதானே, என்னதான் பெரிய தொடர்புகள் இருந்தாலும், எந்த துறையிலும் திறமை இருந்தால் மட்டுமே நீடிக்க முடியும்.
