நடிகர் பரத் நடிக்கும் புது படம் பூஜையுடன் தொடக்கம்

ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம், பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் எம். குரு எழுதி இயக்கும் இப்படத்தில் நடிகர் பரத் மற்றும் மலையாள நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இணைந்து நடிக்கின்றனர்.
அக்டோபர் 21 அன்று நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். பரத், ராஜேஷ் மாதவன், சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயக்குநர் விருமாண்டி முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
நகைச்சுவை, காதல், குடும்பப் பாசம், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் கலகலப்பான திரைக்கதையுடன் இப்படம் தயாராகவுள்ளது.
‘காதல்’, ‘பட்டியல்’, ‘வெயில்’, ‘எம் மகன்’, ‘காளிதாஸ்’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த பரத் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘ந்னா தான் கேஸ் கொடு’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான ராஜேஷ் மாதவனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அலா பொலேலோ’ பாடலில் தோன்றி தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் ராஜேஷ் மாதவன். இருவரும் இணைவது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்தில் சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), ‘யூத்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற மீனாட்சி தினேஷ், ‘மார்கழி திங்கள்’, ‘திரௌபதி 2’ படங்களில் நடித்த ரக்ஷனா இந்துசூடன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், குணச்சித்திர நடிகை சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர். சதீஷ் குமாரும், படத்தொகுப்பாளராக அருள் E. சித்தார்த்தும் பணியாற்றுகின்றனர். கலை இயக்கத்தை டான் பாலா கவனிக்கிறார். சண்டைப் பயிற்சியை தினேஷ் காசி மேற்கொள்கிறார். ஒப்பனைப் பணிகளை மணி கவனிக்க, ஆடை வடிவமைப்பை லாவண்யா தேசிகன் மேற்கொள்கிறார். விளம்பர வடிவமைப்பை தினேஷ் அசோக் கவனிக்கிறார். தயாரிப்புக் கட்டுப்பாட்டை சேது பாண்டியன் மேற்கொள்கிறார். மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் கவனிக்கிறார்.
சென்னை மற்றும் கேரளாவின் அழகிய ஆலப்புழா பகுதிகளில் மொத்தம் 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் இணைந்துள்ள இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களுடன் உருவாகும் இப்படம் ரசிகர்களுக்கு ஒரு முழுமையான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் எனப் படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
