நாய் சேகர் இயக்குநரின் கோயம்பத்தூர் மாப்பிள்ளை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்திய ஊடகத் துறையில் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளைத் தயாரித்து, உருவாக்கி, வெற்றிகரமாக நடத்தி வரும் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), தற்போது திரைப்படத் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம், வரும் டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்நாடு முழுவதும் இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். பிரபல மலையாள நடிகையும், ‘கொட்டுக்காளி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவருமான அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், கே.எஸ். ரவிகுமார், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், சித்தப்பு சரவணன், விநோதினி வைத்தியநாதன், லொள்ளு சபா மனோகரன், CWC மோனிஷா பிளஸ்ஸி, வாட்ஸப் மணி, நக்கலைட்ஸ் ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குடும்பத்துடன் ரசிக்கும் நகைச்சுவைப் படம்!
படம் குறித்து இயக்குநரும் கதாநாயகனுமான கிஷோர் ராஜ்குமார் கூறுகையில், “வெறும் 29 நாட்களில் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளோம். உடல் எடை அதிகமாக இருப்பவர்களை நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் சித்தரித்து இதுவரை பல படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அத்தகைய தோற்றம் கொண்ட ஒருவரைக் கதாநாயகனாக முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. அந்தக் கதாபாத்திரத்தில் நானே நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அனைத்துத் தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. படம் தொடங்கியது முதல் இறுதிவரை நகைச்சுவைக்கும் கலகலப்புக்கும் பஞ்சமிருக்காது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “காதலும் நகைச்சுவையும் நிறைந்த கதையாக இப்படம் உருவாகியுள்ளது. படம் முழுவதும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல ஃபீல் குட் அனுபவத்தை வழங்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜோடிப் பொருத்தத்தை மையமாகக் கொண்ட இந்தக் கலகலப்பான திரைப்படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

திறமையான நடிகை எனப் பெயரெடுத்த அன்னா பென்னுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்!
இப்படத்திற்கு பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், இணை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்புப் பணிகளை ராம் பாண்டியன் மேற்கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் சதீஷ் கதாநாயகனாக அறிமுகமான, கிஷோர் ராஜ்குமார் இயக்கிய ‘நாய் சேகர்’ திரைப்படத்திலும் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் இடம்பெறும் கலகலப்பான பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஸ்ரீ சசிகுமார் கலை இயக்குநராகவும், கிருத்திகா சேகர் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் நிர்வாகத் தயாரிப்புப் பணிகளை எஸ். என். அஸ்ரப் மற்றும் நரேஷ் தினகரன் கவனித்துள்ளனர்.
காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் நிறைந்த ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம், நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படத் தயாரிப்பாக உருவாகியுள்ளது. அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
