நடிகர் நானியுடன் இயக்குனர் சௌரவ் கூட்டணி
கதைகள் ஆயிரம். அதற்கு பொருந்தும் நடிகர்கள் முக்கியம். அவ்வகையில், ஒரு நிகழ்வு காண்போம்..
‘ஹாய் நானா’ கூட்டணியான நானி – இயக்குனர் செளரவ் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர்.
செளரவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாகூர், ஜெயராம், நாசர் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஹாய் நானா’. 2023-ம் ஆண்டு டிசம்பரில் வெளியான இப்படம் கமர்ஷியலாக வெற்றியை கண்டது. மேலும், திரைக்கதை, பாடல்கள், நடிப்பு, இசை என அனைத்து விதத்திலும் கொண்டாடப்பட்டது.
‘ஹாய் நானா’ படத்துக்குப் பிறகு எந்தவொரு படத்தையும் செளரவ் இயக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு செளரவ் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க இருப்பதாகவும், 2 பாகங்களாக இப்படம் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்படம் ஒப்பந்தமாக மாறவில்லை. இதனால் பல நடிகர்களிடம் கதைகள் கூறிவந்தார் செளரவ்.
இறுதியாக, முதல்பட நாயகனான நானியை மீண்டும் இயக்க முடிவு செய்திருக்கிறார் செளரவ். அவர் கூறிய காதல் கதை நானிக்கு மிகவும் பிடித்திருப்பதால், உடனடியாக தேதிகள் ஒதுக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். ‘தி பாரடைஸ்’, சுஜித் இயக்கும் படம் ஆகியவற்றை முடித்துவிட்டு, செளரவ் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் நானி. அப்படி என்னவாக இருக்கும் இந்த கதை? பொறுத்திருந்து பார்ப்போம்.