‘எம்புரான்’ பட தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ‘ரெய்டு’
‘எம்புரான்’ பட சர்ச்சையை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
நடிகர் பிருத்விராஜ் இயக்கி, மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘எம்புரான்’ ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கிடையே இப்படம் சர்ச்சைகளிலும் சிக்கி, மறு எடிட்டிங்கிற்காக அனுப்பப்பட்டு படத்தில் 24 மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த புதிய பதிப்பு திரையரங்குகளில் வெளியானது.
எடிட்டிங்கிற்குப் பிறகு, படத்தின் ஆன்லைன் முன்பதிவில் சரிவு ஏற்பட்டாலும், அது படத்தின் வசூலை பாதிக்கவில்லை என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர். கேரளாவைப் போல் தமிழ்நாட்டிலும் வசூலை குவித்து வருகிறது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.7 கோடிக்கு மேல் வசூலித்து, உலகளவில் ரூ.250 கோடி வசூலை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்நிலையில், ‘எம்புரான்’ தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
‘எம்புரான்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இதன் 3-பாகமும் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ‘எம்புரான்’ பட இறுதியில் உஷா உதுப் பாடிய பாடலில் ‘அஸ்ராயேல்’ என்ற வார்த்தை முக்கியத்துவத்துடன் வருகிறது. இது, 3-ம் பாகத்தின் டைட்டிலாக இருக்கலாம் என திரை ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.