தமிழிலும் டப்பிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது – இயக்குநர், நடிகர் பசில் ஜோசப்

மலையாளத்தில் வெற்றி பெற்ற “அதிரடி” திரைப்படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக உள்ளது. இயக்குநர் அருண் அனிருதன் இயக்கியுள்ள இப்படத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் தயாரித்துள்ள இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அருண் அனிருதன், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படத்திற்கு ‘அதிரடி’ என்ற தலைப்பை பசில் ஜோசப் பரிந்துரைத்தார். அந்த வார்த்தைக்கு இருக்கும் தாக்கம் போலவே இந்தப் படத்திற்கும் ஒரு தனித்துவமான தாக்கம் இருக்கிறது. கல்லூரி பின்னணியில் உருவான இந்தக் கதை தமிழ் ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்,” என்றார்.
எழுத்தாளர் பால்சன் சக்ரியா பேசும்போது, “தமிழ் ரசிகர்களுக்காக வசனங்களில் கூடுதல் கவனம் எடுத்துள்ளோம். மொழிபெயர்ப்பு மட்டுமல்லாமல், தமிழ் கலாச்சாரத்துடன் ஒத்துப் போகும் வகையில் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.
நடிகர் பசில் ஜோசப், “இந்தப் படத்திற்கு தமிழில் நானே டப்பிங் செய்துள்ளேன். ஆரம்பத்தில் சில வார்த்தைகள் சிரமமாக இருந்தாலும், பின்னர் தமிழ் பேசுவது மிகவும் சுவாரஸ்யமாக மாறியது. உண்மையான உழைப்புக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள். அதனால் தான் இந்தப் படம் தமிழிலும் பெரிய வரவேற்பைப் பெறும் என நம்புகிறோம்,” என்றார்.
மேலும், “நடிப்பதை விட இயக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். இயக்குநராக இருக்கும்போது ஓட்டுநர் இருக்கையில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கிறது,” என்றும் அவர் கூறினார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் பேசும்போது, “திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொள்வது புதுமையான அனுபவம். பசில் எந்த விஷயத்திலும் முழு உழைப்பையும் கொடுப்பார். அதற்கான வெற்றி இந்தப் படத்திற்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வந்துள்ளேன்,” என்றார்.
மேலும், “சி.எஸ்.கே. அணியில் இணைந்த பிறகு பொறுப்பு அதிகரித்துள்ளது. சென்னை ரசிகர்கள் அளிக்கும் அன்பு மிகப்பெரியது. தற்போது தமிழகம் எனக்கு இரண்டாவது வீடாக மாறிவிட்டது. சென்னையில் கிடைக்கும் உணவு மிகவும் பிடிக்கும். கடந்த வாரம் நாயர் மெஸ்ஸில் சாப்பிட்டேன், அற்புதமாக இருந்தது,” என்றும் சிரிப்புடன் பகிர்ந்துகொண்டார்.
