‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து தேவிஸ்ரீ பிரசாத் நீக்கம்; வேறு இசையமைப்பாளர் யார்?
ஒரு திரைப்படத்திற்கு உயிரோட்டமே இசைதான். அழுகை, ஆனந்தம், ஆவேசம் என அனைத்து உணர்வுகளையும் இசையே பிரதிபலிக்கிறது. அதனை கருத்தில் கொண்டுதானோ என்னவோ ‘தல’ அஜீத் படத்திலிருந்து தேவிஸ்ரீ பிரசாத் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணித் தகவல் குறித்து காண்போம்..
தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத், அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்திற்காக தேசிய விருது வென்றிருந்தார்.
‘புஷ்பா’ பட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கும் கமிட்டாகி இருந்த தேவி ஸ்ரீ பிரசாத், ஒரு கட்டத்தில் படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பாதியிலேயே விலகினார். தற்போது, அவருக்கு பதில் தமன் மற்றும் சாம் சி.எஸ் ஆகியோரை வைத்து பின்னணி இசை பணிகளை முடித்து வருகின்றனர்.
குறிப்பாக, தெலுங்கு மட்டுமின்றி தமிழ் திரையுலகில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.
இவர் இசையில் சமீபத்தில் வந்த கங்குவா திரைப்படத்தின் தோல்விக்கு, பின்னணி இசை அதிக சத்தத்துடன் இருந்ததும் காரணம் என புகார் எழுந்தது. இதனால் தான், குட் பேட் அக்லி பட வாய்ப்பு அவரை விட்டு நழுவி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அவர், நீக்கப்பட்டதற்கு பாடல்களை காப்பியடித்ததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
அதாவது, தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா படத்திற்காக அவர் இசையமைத்து ஹிட்டான பாடல் பொனகாலு லோடிங்..! இந்த பாடலை தமிழில் குட் பேட் அக்லி படத்துக்காக, அப்படியே காப்பி அடித்து லிரிக்ஸை மட்டும் மாற்றி ரெடி பண்ணி கொடுத்திருக்கிறார்.
இதனால், அதிருப்தி அடைந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இதுதான் உண்மை காரணமா? இல்லை வேறு ஏதேனும் பிரச்சனையா? என்பது படக்குழு விளக்கம் அளித்தால் தான் தெரியவரும்.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்திற்கு இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தற்போது, அனிருத் இருக்கும் பிசி ஷெட்யூலில் ஓகே சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இசையால் சாதனையும் தொடரும், சில நேரம் சோதனையும் நிகழும். சுவாசக்காற்றும் நிசப்த இசை தானே.!