சாவா-சிக்கந்தர்-எம்புரான்: மக்களால் வரவேற்கப்படும் திரைப்படம் எது தெரியுமா?

வரலாற்றுக் கதையை திரைப்படமாக எடுப்பது முக்கியமல்ல. அது மக்களால் வரவேற்கப்படுகிறதா என்பதுதானே முக்கியம். சரி, விஷயத்திற்கு வருவோம்..
பாலிவுட் சினிமாவில் ‘சாவா’ படம் 50 நாட்களை கடந்தும் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம், மராட்டிய மன்னர் சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. லக்ஷமன் உடேகர் இயக்கிய இப்படத்தில் விக்கி கவுஷல் சம்பாஜி மகாராஜாவாகவும், அக்ஷய் கண்ணா அவுரங்கசீப்பாகவும் நடித்துள்ளனர்.
அதாவது, முகலாயர்களுக்கு எதிரான மராட்டிய மன்னனின் போராட்டத்தையும், இறுதியில் அவர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டதையும் விவரிக்கிறது. இந்த வரலாற்றுக் கதை வடமாநிலங்களில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.
இந்நிலையில் ‘சாவா’ படம் வெளியாகி 50 நாட்களை கடந்தும் டிக்கெட் புக்கிங்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதாவது, அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ்- சல்மான்கான் கூட்டணியில் ஆக்ஷன் மூவியாக உருவான ‘சிக்கந்தர்’ படத்தையே முன்பதிவில் பின்னுக்கு தள்ளியுள்ளது.
இப்படம், வெளியான முதல் வாரத்திலேயே உலகம் முழுவதும் ரூ.219 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால், ‘சிக்கந்தர்’ படமோ முதல் வாரத்தில் இன்னும் ரூ.100 கோடியையே நெருங்கவில்லை.
இச்சூழலில், சர்ச்சைகளில் சிக்கி 24 காட்சிகள் நீக்கப்பட்டு மறுபதிப்பாக வெளியாகியுள்ள ‘எம்புரான்’ வசூல்ரீதியாக தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும், இப்படத்தின் தயாரிப்பாளருக்கும் பிருத்விராஜை தொடர்ந்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.