தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பயோபிக் திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, ‘டிராகன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ‘தர்மன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், அந்தப் படத்திற்கு ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என தலைப்பு வைப்பேன் என்று அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
- Advertisement -
மேலும், அப்படத்தை இரண்டு பாகங்களாக அணுக விரும்புவதாக கூறிய அவர், முதல் பாதியை விஜய்யின் திரையுலகப் பயணம் மற்றும் அவர் அடைந்த வெற்றிகளை மையமாக வைத்து உருவாக்குவேன் என்றும், சினிமாவில் உச்சத்தைத் தொட்ட விஜய் தீவிர அரசியலில் களமிறங்க எடுத்த முடிவை படத்தின் முக்கிய இடைவேளைக் காட்சியாக அமைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் மக்கள் சேவையை மையமாகக் கொண்டு நகரும் வகையில் திரைக்கதையை உருவாக்குவேன் எனவும் அஸ்வத் மாரிமுத்து குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட எந்தவொரு பயோபிக் படமும் அதிகாரப்பூர்வமாக உருவாகவில்லை. இருப்பினும், விஜய்யின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கும் எண்ணமே தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், விஜய் தற்போது முழுநேர அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே, கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த், சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். மேலும், பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அஸ்வத் மாரிமுத்து அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.