ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில், கற்றல் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட 115 புத்தகங்களை ஒரே மேடையில் வெளியிட்டு கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான விவேகா உலக சாதனை படைத்துள்ளார். இந்த நிகழ்வு தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த 14-ம் தேதி ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில், உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் மொழிகளைச் சேர்ந்த புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தக் கண்காட்சியில் புத்தக வெளியீட்டுக்கென பிரத்யேக அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த அரங்கில், கற்றல் கல்வி மையத்தின் நிறுவனரும் கல்வியாளருமான ஸ்ரீ ரோகிணி தலைமையில், கற்றல் பதிப்பகம் பதிப்பித்த 115 புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான விவேகா, ஒரே தருணத்தில் 115 புத்தகங்களை வெளியிட்டு எழுத்தாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- Advertisement -
தமிழ், அரபி, பிரெஞ்சு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில், 115 எழுத்தாளர்களின் 115 நூல்கள் ஒரே மேடையில் வெளியிடப்பட்டது இந்த நிகழ்வின் சிறப்பாக அமைந்தது. இது உலக சாதனை நிகழ்வாகவும் பன்மொழி அறிஞர்களால் பாராட்டப்பட்டது.
மேலும், 12 வயதுக்குள் 5 மொழிகளில் புத்தகங்களை எழுதிய காதம்பரி என்ற சிறுமியும் இந்த மேடையில் கௌரவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் ஷார்ஜாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், உயரதிகாரிகள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் புத்தக வாசிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.