விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ‘96’ திரைப்படம், வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சி. பிரேம்குமார் எழுதி இயக்கிய இப்படம், பள்ளிப் பருவத்தில் தொடங்கிய காதல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் இருவரின் நினைவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
படத்தில் விஜய் சேதுபதி ராம் கதாபாத்திரத்திலும், திரிஷா ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி. கிஷன், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தில் இடம்பெற்ற ‘காதலே காதலே’, ‘தி லைஃப் ஆஃப் ராம்’, ‘அந்தாதி’, ‘இரவிங்கு தீவாய்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
- Advertisement -
Madras Enterprises சார்பில் எஸ். நந்தகோபால் தயாரித்த ‘96’, காதல், பிரிவு, நட்பு, பள்ளிப் பருவ நினைவுகள் மற்றும் நிறைவேறாத காதலின் உணர்வுகளை இயல்பான திரைக்கதை மூலம் பதிவு செய்ததற்காக ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் ராம் – ஜானு கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தன. தற்போது படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், ‘96’ மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் ராம் – ஜானுவின் காதல் நினைவுகளை மீண்டும் பெரிய திரையில் கொண்டாடும் வாய்ப்பையும், திரையரங்கில் இப்படத்தைப் பார்க்கத் தவறிய புதிய தலைமுறை ரசிகர்கள் முதன்முறையாக பெரிய திரையில் ரசிக்கும் வாய்ப்பையும் பெற உள்ளனர்.
ராம் – ஜானுவின் காதல் நினைவுகள் மீண்டும் பெரிய திரையில்… ‘96’ – அக்டோபர் 9 முதல் திரையரங்குகளில்!