விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஐதராபாத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தானா திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதியில் சமாதியில் வழிபாடு நடத்தினார்.
இந்நிலையில், புட்டபர்த்தியில் இருந்து விஜய் தேவரகொண்டா அதிகாலை காரில் ஐதராபாத் திரும்பிக் கொண்டிருந்தார். ஐதாராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தெலுங்கானாவின் ஜொகுலம்பா கட்வால் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது விஜய் தேவரகொண்டா பயணித்த கார் மீது, சாலையில் பின்னால் வந்த கார் வேகமாக மோதியது.
இதனால், அதிர்ச்சியடைந்த விஜய் தேவரகொண்டாவின் கார் டிரைவர் காரை சாலையோரம் நிறுத்தினார். ஆனால், மோதிய கார் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. இந்த விபத்தில் விஜய் தேவரகொண்டாவின் கார் லேசான சேதமடைந்தது. அதேவேளை, இந்த விபத்தில் விஜய் தேவரகொண்டா உள்பட காரில் பயணித்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
அதேவேளை, இந்த விபத்து தொடர்பாக விஜய் தேவரகொண்டாவின் கார் டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர். இந்நிகழ்வு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.