விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

மு. மாறன் இயக்கத்தில், தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 6, 2026 அன்று தீபாவளி சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆக்‌ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’, அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான ஆழமான அன்பையும் பிரிக்க முடியாத பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தை எழுதி இயக்கியுள்ள மு. மாறன், உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் வணிகரீதியான அம்சங்களையும் இணைத்துள்ளார். கதையின் நாயகனாக விஜய் ஆண்டனி நடித்துள்ளதுடன், படத்திற்கு இசையமைத்தும் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். வலுவான கதாபாத்திரங்களையும் தனித்துவமான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி, இப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்புடன் ஆக்‌ஷன் காட்சிகளிலும் கவனம் ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே வெளியான படத்தின் இரண்டாவது தோற்றப் போஸ்டரில், விஜய் ஆண்டனியுடன் ஒரு சிறுமி இடம்பெற்றிருந்தார். தந்தை – மகள் உறவின் நெருக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்த அந்தப் போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

- Advertisement -

தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்தைய விளம்பரப் பணிகளைத் தொடங்கப் படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இப்படம், அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளையும் குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் ஒருங்கிணைத்து ரசிகர்களுக்கு முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்பிரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ், லிஸ்ஸி ஆண்டனி, குமார் நடராஜன், விஜயன், பிரவீணா, ஹரிதா, ஹரிப்பிரியா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ திரைப்படம் பாசம், ஆக்‌ஷன் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பண்டிகைக் கொண்டாட்டத்தில் இணைகிறது.

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ – நவம்பர் 6, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

Appa KuttiVijay AntonyVijay Antony’s Appa Kutti Release Date Announced