பகல்காம் தாக்குதல்: தவறாகப் புரிந்து கொண்டவர்களுக்கு, விஜய் ஆண்டனி மீண்டும் அறிக்கை

‘தனது பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என விஜய் ஆண்டனி மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..

காஷ்மீர், பகல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், பகல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,

‘காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில், பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மைப் போலவே அமைதியையும், மகிழ்ச்சியையும் விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்’ என தெரிவித்திருந்தார்.

விஜய் ஆண்டனியின் இந்த அறிக்கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ‘பாகிஸ்தானில் 50 லட்சம் இந்தியர்களா? உண்மை தெரியாமல் பேசாதீர்கள்’ எனக் கூறி அவரை கடுமையாக சாடினர். இச்சூழலில், தன்னுடைய பதிவை தவறாகப் புரிந்து கொண்டவர்களுக்காக இன்று மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் விஜய் ஆண்டனி. அந்த அறிக்கையில்,

‘காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம் நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையாண்மையை பாதுகாப்போம்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘முந்தைய அறிக்கையிலேயே இதே மாதிரி தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

actor vijay antonypahalgamterrorismபயங்கரவாதம்விஜய் ஆண்டனி