எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Friends Production House தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், ‘விடியும் காத்திரு’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

எம்.எஸ். பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்க, அம்ஜதா ஷெரின் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோபி அயோத்தி காவலர் கதாபாத்திரத்தில் நடிக்க, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் கதை, கொலை நடந்த ஒரு வீட்டிற்குள் விசாரணைக்காக செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளைச் சுற்றி நகர்கிறது. அந்த வீட்டிற்குள் அவர்கள் எதிர்கொள்ளும் அமானுஷ்ய சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் பரபரப்பான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், பெரிதாக்கப்பட்ட கதவின் சாவித் துவாரத்தின் வழியே அச்சத்துடன் எட்டிப் பார்க்கும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் இடம்பெற்றுள்ளது. அதனுடன் கதவில் இடம்பெற்றுள்ள “You Are Next” என்ற வாசகம் படத்தின் மர்மத்தையும் எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். மெட்ரோ மகேஷ் சண்டைக் காட்சிகளை அமைக்க, ஐஸ்வர்யா நடன அமைப்பையும், ராஜன் வழிவிட்டான் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘விடியும் காத்திரு’ திரைப்படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ. ஹரி உத்ரா தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

M.S.BhaskarVidiyum KaathiruVidiyum Kaathiru Starring M.S. Bhaskar - Chilling First Look Poster Unveiled