மதுரையிலிருந்து சர்வதேச அரங்கிற்கு… ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ உலகளவில் புதிய சாதனை!

தமிழில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடரான ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’, பிரைம் வீடியோவின் உலகளாவிய தரவரிசையில் புதிய சாதனை படைத்துள்ளது. உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணையத் தொடர்களில் இரண்டாம் இடத்தையும், Scripted படைப்புகள் பிரிவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

ஆகஸ்ட் 7ஆம் தேதி உலகளவில் வெளியான இந்தத் தொடர், வெளியான இரண்டே வாரங்களுக்குள் சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் பாகத்தின் மையக் கருப்பொருளான ‘வதந்திக்கும் உண்மைக்கும் இடையிலான முரண்’ என்பதை மட்டும் தக்க வைத்துக்கொண்டு, முற்றிலும் புதிய கதைக்களம், கதாபாத்திரங்கள் மற்றும் மர்மத்துடன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழில் வெளியாகியுள்ள இத்தொடர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் பாகமான ‘வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ சஸ்பென்ஸ் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட தொடராக ரசிகர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக உருவான இரண்டாம் பாகத்தில் புதிய வழக்கு, எம். சசிகுமார் தலைமையிலான புதிய நடிகர்கள் குழு மற்றும் ஆழமான கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதை சொல்லல் இடம்பெற்றுள்ளது.

கலாச்சாரப் பெருமை கொண்ட மதுரையை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதை, பாரம்பரியம், புலனாய்வு மற்றும் ஜல்லிக்கட்டு திருவிழாவின் பரபரப்பான சூழலை மர்மக் கதையுடன் இணைக்கிறது. சிக்கலான கதாபாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான உறவுகள் மற்றும் பல திருப்பங்களுடன் விரியும் விசாரணை ஆகியவை தொடரின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.

- Advertisement -

இத்தொடரில் சசிகுமார், நேர்மையும் உறுதியும் கொண்ட காவல் அதிகாரியான எஸ்.ஐ. மூசா ராசா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உண்மையை கண்டறிய அவர் மேற்கொள்ளும் விசாரணை, அரசியல் மற்றும் ஊடக அழுத்தங்கள் மட்டுமின்றி மனிதர்களின் பலவீனங்களுடனும் மோதுகிறது.

நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்காக நடைபெறும் தொடக்கப் பணிகளின்போது மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. இதையடுத்து தொடங்கும் விசாரணை எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க, அது ‘மணி’ என்ற மர்மமான கைதியை நோக்கி மூசா ராசாவை அழைத்துச் செல்கிறது.

இத்தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி, இயக்கியுள்ளார். வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் படைப்பாளிகள் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் புரொடியூசர்களாக இருந்து தயாரித்துள்ளனர். எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடரில் சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உலகின் பல்வேறு மொழிகளில் வெளியாகும் முன்னணி தொடர்களுக்கு மத்தியில், ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ பிரைம் வீடியோவின் உலகளாவிய டாப் 10 தரவரிசையில் Original Series பிரிவில் ஆறாவது இடத்தையும், ஆங்கிலம் அல்லாத இணையத் தொடர்கள் பிரிவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

மதுரையின் பின்னணியில் தொடங்கிய ‘வதந்தி 2’, தற்போது உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சர்வதேச அளவில் தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்தியுள்ளது.

M. SasiKumarVadhandhi 2Vadhandhi 2 Makes Global Impact on Prime Video