ராவடி படத்தின் வெளியீட்டுத் தேதி!

பஸில் ஜோசப் மற்றும் L.K.அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு புதிய போஸ்டர் மற்றும் ‘குஜிலிமஸ்து’ வீடியோவுடன் அறிவித்துள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S.S.லலித் குமார் தயாரித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. ‘ராவடி’ திரைப்படம் வரும் 2026 டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியாகியுள்ள ‘குஜிலிமஸ்து’ வீடியோ, காதல், கல்லூரி, அடிதடி, கொண்டாட்டம் என இளைஞர்களை கவரும் பல்வேறு அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது. ‘அராஜகம் பத்தல பத்தல’ பாடலுடன் இடம்பெறும் இந்த வீடியோவில் பஸில் ஜோசப் மற்றும் L.K.அக்ஷய் குமார் இருவரும் வித்தியாசமான தோற்றங்களில் இடம்பெற்றுள்ளனர்.

இளமை துள்ளலுடன் கூடிய காமெடி என்டர்டெயின்மென்டாக உருவாகியுள்ள ‘ராவடி’, கலகலப்பான சம்பவங்கள் மற்றும் நகைச்சுவை நிறைந்த தருணங்களுடன் இளைஞர்களுக்கான முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளது.

- Advertisement -

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒகேனக்கல்லின் இயற்கை அழகுடன் படமாக்கப்பட்ட காட்சிகள் படத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஸில் ஜோசப், L.K.அக்ஷய் குமார் ஆகியோருடன் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பையும், P.S.ஹரிஹரன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். L.K.விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே வெளியான ‘ராவடி’ படத்தின் டீசர் கவனம் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘குஜிலிமஸ்து’ வீடியோ மற்றும் டிசம்பர் 24 ரிலீஸ் அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

basil josephLK Akshay KumarRaavadiRaavadi Release Date Announced