ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ராக்கா’. இப்படம் சினிமா தொழில்நுட்பத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 2026-ல், ஒரே நேரத்தில் 37 கலைஞர்களை நிகழ்நேரத்தில் (Real-Time) Motion Capture செய்ததற்காக ‘ராக்கா’ திரைப்படம் கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெற்றுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் செப்டம்பர் 15, 2026 அன்று வழங்கப்பட்டது.
கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை, கின்னஸ் உலக சாதனையின் மூத்த நடுவர் ஸ்வப்னில் டாங்ரிகர், அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோரிடம் வழங்கினார். படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்வில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த சாதனை குறித்து அல்லு அர்ஜுன் பேசுகையில், சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தும் இந்த சாதனை ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் பெருமையான தருணம் எனக் குறிப்பிட்டார். இயக்குநர் அட்லீயின் தொலைநோக்கு பார்வை, படக்குழுவினரின் உழைப்பு மற்றும் சன் பிக்சர்ஸின் ஆதரவு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்தார்.
- Advertisement -
இயக்குநர் அட்லீ கூறுகையில், சிறுவயதில் கின்னஸ் சாதனைகளை ஆச்சரியத்துடன் பார்த்ததாகவும், ஒரு நாள் தங்களது படைப்பும் கின்னஸ் சாதனை படைக்கும் என நினைத்ததில்லை என்றும் தெரிவித்தார். ஒரே படப்பிடிப்பில் 37 Motion Capture Assets-ஐ ஒன்றிணைத்து இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது தனக்கு மகிழ்ச்சியும் பணிவும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
‘ராக்கா’ படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த Motion Capture பணியில் 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை 37 கலைஞர்கள் ஒரே அமர்வில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரே Capture Volume-க்குள் 37 பேரின் தனித்தனி நடிப்பையும் ஒரே நேரத்தில் துல்லியமாகப் பதிவு செய்வது இந்த முயற்சியின் முக்கிய சவாலாக இருந்துள்ளது.
இதற்காக படத்தின் VFX குழு, படத்தின் தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப புதிய Motion Capture Pipeline மற்றும் Workflow-ஐ உருவாக்கியுள்ளது. கின்னஸ் சாதனை முயற்சியில் 92 Optical Motion Capture கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. Capture, Calibration, Networking, Synchronization, Real-Time Unreal Visualization, Witness Cameras மற்றும் Facial Capture உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பு, அட்லீயின் இயக்கம், அல்லு அர்ஜுனின் அர்ப்பணிப்பு, Apple Art Studio-வின் தொழில்நுட்பப் பங்களிப்பு, மேம்பட்ட VFX பணிகள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் கூட்டு முயற்சி ஆகியவை இந்த சாதனைக்கு முக்கிய பங்காற்றியுள்ளன.
‘ராக்கா’ திரைப்படத்தின் இந்த கின்னஸ் உலக சாதனை, இந்திய சினிமாவின் நவீன திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் பிரம்மாண்டமான படைப்பாற்றலை உலக அரங்கில் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.