விஷாலின் ‘மகுடம்’ பட ‘லிங்கா’ பாடலால் கவனம் ஈர்த்த V7H!

நடிகர் விஷால் இயக்கி நடித்து வரும் ‘மகுடம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான முதல் சிங்கிளான “லிங்கா…” பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெளியான இரண்டு நாட்களிலேயே மில்லியன் கணக்கான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ள இந்த பாடல், இளைஞர்கள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக இந்த பாடலை பாடியுள்ள ராப் பாடகர் வினோத் என்கிற V7H, தனது தனித்துவமான குரல் மற்றும் ராப் ஸ்டைலால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகள் கலந்த மாஸ் ராப் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள “லிங்கா” பாடல், படத்தின் நாயகனின் கம்பீரத்தையும் கெத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. V7H எழுதிய இந்த பாடலை, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும் இணைந்து பாடியுள்ளார்.

பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து பேசிய V7H, “12-ம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டவன் நான். இசைதான் என் வாழ்க்கை. இதுவரை இரண்டு இசை ஆல்பங்களும், ஐந்து வீடியோ பாடல்களும் வெளியிட்டிருக்கிறேன். ராப் மட்டுமல்லாமல் அனைத்து வகையான பாடல்களையும் பாடுவேன். ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் தான் எனக்கு முதல் சினிமா வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு என் உணவக தொழிலில் கவனம் செலுத்த வேண்டியதால் சினிமாவில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை,” என்றார்.

மேலும், “பல ஆண்டுகளுக்கு முன்பு விஷால் அண்ணாவை சந்தித்தபோது, சினிமாவில் தொடர்ந்து பாட வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். அதற்குப் பிறகும் தொழில் காரணமாக இசைத்துறையில் முழுமையாக இயங்க முடியவில்லை. இந்த நிலையில், ஒரு நாள் விஷால் அண்ணா அழைத்து ‘லிங்கா’ பாடலுக்கான வாய்ப்பை வழங்கினார். கதாபாத்திரத்தின் தன்மையை விளக்கி, ‘உன்னால் முடியும்’ என்று நம்பிக்கை கொடுத்தார். அந்த ஊக்கம்தான் இந்த பாடலை சிறப்பாக உருவாக்க உதவியது,” என்று தெரிவித்தார்.

பாடலை கேட்ட பிறகு விஷாலும், ஜி.வி. பிரகாஷ் குமாரும் பாராட்டியதாக கூறிய V7H, “சினிமாவிலிருந்து விலகி இருந்தாலும் இசையை ஒருபோதும் விட்டு விடவில்லை. பல பாடல்களை எழுதி, டியூன் போட்டு உருவாக்கி வைத்திருக்கிறேன். தற்போது என்னிடம் சுமார் 40 பாடல்கள் உள்ளன. அவற்றை வெளியிடும் முயற்சிகளில் விரைவில் இறங்கவிருக்கிறேன். அதேபோல், விஷால் அண்ணாவின் நிறுவனத்திற்காக ஒரு இசை ஆல்பத்தையும் உருவாக்க உள்ளேன்,” என்றார்.

“லிங்கா பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள அன்பு எனக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இனி என் திரை இசைப் பயணம் மேலும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்குக் காரணமான விஷால் அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி,” என்றும் அவர் கூறினார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சௌத்ரி வழங்கும் ‘மகுடம்’ திரைப்படத்தை பி. சுரேஷ், ஆர்.பி. ஜீவன் சௌத்ரி, ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா தயாரிக்கின்றனர். ரவி அரசு கதை எழுதியுள்ள இப்படத்திற்கு, விஷால் திரைக்கதை எழுதி இயக்குகிறார். பொன் பார்த்திபன் மற்றும் விஷால் வசனம் எழுதியுள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளனர். என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ள நிலையில், ஜி. துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். திலீப் சுப்பராயண் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஏகாதசி, விவேக், உமாதேவி, கருணாகரன் மற்றும் V7H ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

AjayAnjaliDushara VijayanG.V.Prakash KumarJeya prakashJohn VijayMagudamRapper VinothRise Of LingaV7HV7H Grabs Attention with the ‘Linga’ Song from Vishal’s ‘Magudam’!Vamsi KrishnaVishal