டாக்ஸிக் திரை விமர்சனம்

இந்தியா 1947-ல் சுதந்திரம் பெற்றுவிட்டாலும், கோவாவில் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் கேங்ஸ்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் சால்வடாரின் நிழலில் கதை தொடங்குகிறது. அவருக்கு துணையாக ராயா (யஷ்) மற்றும் அவரது அக்கா கங்கா (நயன்தாரா) இருக்கின்றனர்.

தங்களது பெற்றோரை கொன்றவரை பழிவாங்கும் நோக்கில் ராயாவும் கங்காவும் போதைப்பொருள் கடத்தல் உலகில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்கின்றனர். மது, பெண்கள் என கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழும் ராயா, தனது பாஸ் சால்வடாரின் மகள் ரெபெக்காவுடன் (தாரா சுதாரியா) நெருக்கமாகிறார். இந்த விஷயம் சால்வடாருக்கு தெரியவர, ராயா – ரெபெக்கா திருமணம் முடிவு செய்யப்படுகிறது.

இதற்கிடையே கோவாவுக்கு சர்க்கஸ் நடத்த வரும் நாடியாவுடனும் ராயா நெருக்கம் கொள்கிறார். இதன் விளைவாக நாடியா கர்ப்பமாகிறார். இந்த விஷயம் சால்வடாருக்கு தெரியவர, ராயா, கங்கா உள்ளிட்டவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

மலையாளத்தில் நடிகையாக அறிமுகமாகி பின்னர் இயக்குநராக மாறிய கீது மோகன்தாஸ், ‘லையர்ஸ் டைஸ்’, ‘மூத்தோன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் யஷ் நடிப்பது, நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி உள்ளிட்ட முன்னணி நடிகைகள் இடம்பெறுவது என பல காரணங்கள் ‘டாக்ஸிக்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன.

கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் டிராமாவாக கீது மோகன்தாஸ் உருவாக்கியுள்ளார். குறிப்பாக முதல் பாதியில் ராயா கதாபாத்திரம் எந்த அளவுக்கு ‘டாக்ஸிக்’ தன்மை கொண்டது என்பதை இயக்குநர் அழுத்தமாக காட்சிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

ராயா – கியாரா சம்பந்தப்பட்ட காட்சிகளும், அவர்களது உரையாடல்களும் ஏற்கனவே பல கேங்ஸ்டர் படங்களில் பார்த்த அனுபவத்தை நினைவுபடுத்தினாலும், வசனங்கள் காட்சிகளுக்கு ஓரளவு வலு சேர்க்கின்றன. கேங்ஸ்டர் படங்களில் வன்முறை தவிர்க்க முடியாதது என்றாலும், ‘டாக்ஸிக்’ அதையும் தாண்டிச் செல்கிறது. குறிப்பாக ‘கே.ஜி.எஃப்’ படங்களையே மிஞ்சும் அளவுக்கு சில வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு மேல் ஆபாசம் சார்ந்த காட்சிகளும் முகம் சுளிக்க வைக்கின்றன.

முதல் பாதி ஓரளவு சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், இடைவேளையில் படம் செல்லும் திசை ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இரண்டாம் பாதியில் படத்தின் நீளமே மிகப்பெரிய சவாலாக மாறுகிறது. முக்கியமான திருப்பம் வருவதற்கு முன்பாக நீண்ட நேரம் பொறுமையை சோதிக்கும் வகையில் காட்சிகள் நகர்கின்றன. இதனால் முக்கியமான ட்விஸ்ட் வெளிப்படும் நேரத்தில் கூட, அதை முழுமையாக ரசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளின் எண்ணிக்கையையும், ஒட்டுமொத்த நீளத்தையும் குறைத்திருந்தால், இயக்குநர் சொல்ல வந்த விஷயம் பார்வையாளர்களிடம் இன்னும் சிறப்பாக சென்றடைந்திருக்கும்.

நடிப்பைப் பொறுத்தவரை யஷ் பிரமாதப்படுத்தியுள்ளார். அவரது ஸ்கிரீன் பிரசென்ஸ் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டுகிறது. நயன்தாராவும், கியாரா அத்வானியும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை இயல்பாக கையாண்டுள்ளனர். ருக்மிணி வசந்துக்கு பெரிதாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் இல்லை என்றாலும், தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். தாரா சுதாரியா மற்றும் ஹூமா குரேஷியின் கதாபாத்திரங்கள் கதைக்கு பொருத்தமாக அமைந்துள்ளன.

தொழில்நுட்ப ரீதியாக ‘டாக்ஸிக்’ பிரம்மாண்டமான அனுபவத்தை வழங்குகிறது. 1940கள் மற்றும் 1960களின் கோவாவை கண்முன் கொண்டு வரும் வகையில் காட்சியமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும், வசனங்களும் படத்தின் முக்கிய பலமாக உள்ளன.

மொத்தத்தில், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள், யஷின் மிரட்டலான நடிப்பு மற்றும் சிறப்பான தொழில்நுட்ப அம்சங்கள் இருந்தாலும், அதிகப்படியான வன்முறை, ஆபாசக் காட்சிகள், லாஜிக் மீறல்கள் மற்றும் நீண்ட நேர படமாக்கல் ஆகியவை ‘டாக்ஸிக்’ படத்தின் அனுபவத்தை சற்று கடினமாக்குகின்றன. சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

50%

டாக்ஸிக் திரை விமர்சனம்

  • Rating
'ToxicGeetu MohandasHuma QureshiKiara AdvaninayantharaRukmini VasanthTara Sutariatoxic movietoxic movie reviewYashடாக்ஸிக்