தப்பித்து வந்த இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்தார்களா?: ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரை விமர்சனம்

இல்லாதோர்க்கு இயன்ற உதவிகள் செய்வோமே; கருணை உள்ளம் தானே தெய்வீகம். ஆம், வாழ்வோம், வாழ்விப்போம். மனிதநேயம் நிறைந்தே மகோன்னதமாய் உயர்வோம். இதான்ங்க, டூரிஸ்ட் ஃபேமிலி கதைக்களம். இதனை, அறிவுறுத்தும் பாடமாக எடுக்காமல் ஃபீல் குட் படமாக கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது, சசிகுமார்- சிம்ரன் கணவன் மனைவியாகவும்; மிதுன் ஜெய்சங்கர்- கமலேஷ் அவர்களது மகன்களாகவும் வாழ வழி தேடும் பயணம்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம். இனி, இந்த குடும்பத்து நிகழ்வுகள் பார்ப்போம்..

வறுமைசூழ் நிலையில் இலங்கையில் இருந்து சசிகுமார் தனது குடும்பத்துடன் திருட்டுத்தனமாக தமிழகம் வருகிறார். சென்னையில், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்க தொடங்குகிறார்.

இச்சூழலில், சசிகுமார் ராமேஸ்வரம் வந்த அதே நாளில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்கிறது. இதனால், காவல்துறையின் விசாரணை வளையத்திற்குள் சசியின் குடும்பம் சிக்கி விடுகிறது. இந்த பரிதவிப்பிலிருந்து இவர்கள் தப்பித்தார்களா? வாழ்ந்தார்களா? என்ன ஆயிற்று? என்பதுதான் நகைச்சுவைக் கதைபோல விவரிக்கிறது.

படத்தில், ஈழத் தமிழர் கதாபாத்திரத்தில் சசி இயல்பாக பொருந்தியிருக்கிறார். அவருக்கு மனைவியாக நடித்திருக்கும் சிம்ரன் சற்று முதிர்ச்சியாக தென்பட்டாலும், நிறைவாக நடித்திருக்கிறார்.

குறிப்பாக, இவர்களுக்கு மூத்த மகனாக வந்து “காதலில் விழும்” மிதுன் சிறப்பு. இளைய மகன் கமலேஷ் ரசிக்க வைத்திருக்கும் “சிரிப்பு மத்தாப்பு” எனலாம்.

மேலும் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், இளங்கோ ரவி, ஸ்ரீஜா ரவி ஆகியோரும் அவரவர்க்கு கொடுத்த கேரக்டர்களுக்கு
பரவாயில்லை.

காட்சிக்கேற்ற பின்னணி இசையை தந்திருக்கிறார் ஷான் ரோல்டன். பட்ஜெட்டுக்கேற்ற ட்ராமாட்டிக் ரக ஒளிப்பதிவு வார்த்திருக்கிறார் அரவிந்த விஸ்வநாதன்

பொதுவாக, ஈழத் தமிழர்களின் வாழ்வியலை சோக கீதமாய் வாசிக்காமல், நகைச்சுவை இழையோட, மனிதத்தன்மையோடு அணுகி நேசித்திருக்கும் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் பாராட்டுக்குரியவர்.

முன்னதாக இப்படத்தின் சிறப்புக் காட்சி பார்த்த இயக்குனர் ரத்னகுமார் பாராட்டு பதிவு வெளியிட்டிருந்தார். மேலும் சிம்ரன் தெரிவிக்கையில், ‘இப்படம் குடும்பங்களுக்காக உருவாக்கப்பட்டு உள்ளது. நகைச்சுவை சிறப்பாக இருக்கும்’ என தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த படத்தின் புரொமோஷன் விழாவில் இயக்குனர் அபிஷன், தனது பள்ளிக்காலம் முதல் தற்போதுவரை உடனிருக்கும் தோழியிடம், மேடையில் இருந்தவாறு ப்ரொபோஸ் செய்தார். அதாவது “ஐ லவ் யூ ஸோ மச் அகிலா” என
புன்னகைத்தார்.

அப்போது, அவரது தோழி அகிலா கண்கலங்கிய நெகிழ்ச்சியான நிகழ்வு பார்வையாளர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இப்ப, இந்த படத்தை பொறுத்தவரைக்கும் செயற்கையான நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும், ரசிக்கலாம். சிக்கனமான குடும்பத்தில் எக்கணமும் மகிழ்ச்சி தானே பொங்கும். அவ்வகையில், இந்த குடும்பத்தை வரவேற்போம், வாழ்விப்போம்.!

80%

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரை விமர்சனம்

  • Rating
BucksElango KumaravelKamaleshM.S.BhaskarMithun Jai SankarRamesh ThilakSasikumarSimranSreeja RaviTourist FamilyTourist Family Movie ReviewTourist Family ReviewYogi Babuடூரிஸ்ட் ஃபேமிலி'