சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்ட மிகச் சில நடிகர்களை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் “ஏழுகடல் ஏழு மலை”.
பெயர் தெரியாத மூவர் கதை தான் இது. துபாயிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பும் ஒரு குடும்பஸ்தன் (சூரி), தீபாவளி அன்று கூட்டம் இல்லாத ஒரு ரயிலில் ஏறுகிறார். ஏறிய பிறகு தான் தெரியும் அவசர அவசரமாக ஓடும் ரயிலில் ஏறி மிகப்பெரும் ஆபத்தை சந்திக்க போகிறோம் என்பது. அங்கே தன்னை சாகா வரம் பெற்றவன் என சொல்லிக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறார் இன்னொருவர் ஹல்க் என சித்தரிக்கப் படுகிறார் (நிவின் பாலி).
அவ்வளவுதான் இருவருக்கும் இடையே நிகழும் கருத்து மோதல்களும், நினைவுகள் பரிமாற்றமும் தான் முழு கதை. இவர்களுக்கிடையே இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறது ரயில் எலி. இன்னொரு புறம் சாகாவரம் பெற்ற ஹல்க் நினைவுகளிலும் மற்றும் கனவுகளிலும் மட்டுமே வந்து போகும் ஷி-ஹல்க் (அஞ்சலி) இப்படி செல்லும் கதையில் முடிவு என்ன என்பது மீதி கதை.
படத்தின் மிகப்பெரும் பலம் நிவின் பாலி மற்றும் அஞ்சலி. இருவரும் வரும் காட்சிகள் உண்மையாகவே கனவு போலவும் பேண்டஸி உலகமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பலவிதமான உலகங்கள், காதல் என நம்மை அவ்வப்போது தொலைக்கச் செய்து மீண்டும் ரயில் பயணத்திற்கு இழுத்து வருகிறது.
- Advertisement -
சூரி தனக்கான பொறுப்பை உணர்ந்து தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எனினும் ஆரம்பகால மெயின் கதாபாத்திரம் என்பதாலோ என்னவோ பல இடங்களில் சின்னத் தடுமாற்றம் தெரிகின்றது. அஞ்சலி பல படங்களுக்குப் பிறகு தேவதை போல காட்சியில் வருகிறார்.
வழக்கமான ராம் படங்கள் என்றாலே உணர்வுகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்த படமும் அதற்கு சோடை சொல்லாமல் நகர்கிறது. ஆனால் படம் முழுவதும் அது மட்டும்தான் இருக்கிறது. ஒரு எலி அதன் உயிர் மீது காட்டும் அக்கறையில் 10% கூட உடனிருக்கும் மனிதன் மீது காட்டாமல் இருப்பது ஆச்சரியம். ஆனால் கதை அதைத்தான் அழுத்தமாக சொல்கிறது. மனிதன் ஆனாலும் சரி எலியானாலும் சரி இந்த உலகம் எல்லோருக்கும் பொதுவானது என்பதைத்தான் படம் நெடுக பதிவு செய்ய போராடி இருக்கிறார் ராம்.
படம் முழுக்க சைக்கோ தனமாக நடந்து கொள்ளும் நிவின் பாலி ஒரு பக்கம் இன்னொரு புறம் ஓடிக்கொண்டே இருக்கும் ரயில், அவர் சொல்லும் வேறு வேறு உலக கதைகள் என , கதை நம்மையும் சேர்த்து வேறு ஒரு உலகத்திற்குள் கடத்துகிறது.
“கற்றது தமிழ்”, “தரமணி”, “பேரன்பு” போன்ற கதைகள் கொடுத்த ராம் இன்னும் இந்தக் கதையை வேறு ஒரு திரைக்கதையில் கொடுத்திருக்கலாம்.
என். கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவில் வழக்கம் போலவே ராம் உலகம் அழகாகவும், ஆச்சரியத்துடனும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மதி எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் அருமை என்றே சொல்ல வேண்டும். ” ஏழு கடல் ஏழு மலை” பாடல் ராம் + யுவன் ஸ்பெஷல். பின்னணியும் அருமை.
மொத்தத்தில் தெளிவாகவும் மேலும் பாமரனுக்கும் புரிய வேண்டிய ஒன்று “இந்த உலகம் அனைத்து ஜீவராசிகளுக்குமானது” என்கிற கருத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருந்தால் ராமின் முந்தையப் படங்கள் போல் இந்தப்படம் தரமான படைப்பாக மாறியிருக்கும். எனினும் தவிர்க்க முடியாத ராம் ரசிகர்கள் படமாக மாறி இருக்கிறது.
ஏழு கடல் ஏழு மலை திரை விமர்சனம்
ஒரு மனிதநேயப் பயணம்!
- Rating