சைமா விருதுகளில் 6 விருதுகளை அள்ளிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!

தென்னிந்திய திரையுலகில் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களை கவுரவிக்கும் முக்கிய விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை வென்று கவனம் பெற்றுள்ளது.

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான இப்படம், தமிழகத்தில் அடைக்கலம் தேடும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நகைச்சுவை, குடும்ப உணர்வு மற்றும் மனிதநேயம் உள்ளிட்ட அம்சங்களை இணைத்து உருவான இப்படம், திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அதன் வித்தியாசமான கதை சொல்லும் முறைக்காகவும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், சைமா விருது விழாவில் விமர்சகர்கள் தேர்வு செய்த சிறந்த திரைப்படம், சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணிப் பாடகர் – ஆண் மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகர் என மொத்தம் 6 விருதுகளை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வென்றுள்ளது.

- Advertisement -

அறிமுக இயக்குநராக களமிறங்கிய அபிஷன் ஜீவிந்திற்கு சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்துள்ளது. அதேபோல், சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோரின் நடிப்பிற்கும் விமர்சகர்கள் பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. படத்தின் நகைச்சுவை அம்சத்திற்காக யோகிபாபு சிறந்த நகைச்சுவை நடிகர் விருதையும், விஜய் யேசுதாஸ் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகர் – ஆண் விருதையும் பெற்றுள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் சார்பில் நாசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

திரையரங்க வெற்றியைத் தொடர்ந்து தற்போது சைமா விருது விழாவிலும் 6 விருதுகளை வென்றுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, படக்குழுவினருக்கு மேலும் ஒரு முக்கியமான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

SasikumarSimranTourist FamilyTourist Family Bags 6 Awards at SIIMA 2026