பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

குடும்பம் முழுவதும் ரசிக்கும் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர்-காமெடி டிராமா “பரிமளா & கோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

“தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக முற்றிலும் புதிய களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். அவரது வழக்கமான ஸ்டைலில், இந்த முறை திரில்லரும் நகைச்சுவையும் இணைந்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு வித்தியாசமான குடும்பத்தை மையமாகக் கொண்ட இந்தக் கதை, அந்த குடும்ப உறுப்பினர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் அபூர்வமான சம்பவங்களைச் சுற்றி நகர்கிறது. சென்னை முதல் கோயம்புத்தூர், பாலக்காடு வரை பயணிக்கும் இந்தக் கதை, திரில்லர் அம்சங்களும் நகைச்சுவை கலந்த காட்சிகளும் இணைந்து பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் வெளியானவுடன், அதில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்களின் தனித்துவமான தோற்றமும் மனநிலையும் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இந்த படத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் சந்தோஷ் சோபன் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் சாண்டி – அனந்திகா சனில்குமார் இணையும் இன்னொரு காதல் ஜோடியும் படத்தில் இடம்பெற்றுள்ளது.

நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த யோகி பாபு, “தலைவன் தலைவி” வெற்றிக்குப் பிறகு இப்படத்தில் முக்கியமான முழுநீள கதாப்பாத்திரத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், முற்றிலும் மாறுபட்ட காவல் அதிகாரி வேடத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும் சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

“பரிமளா & கோ” திரைப்படம் Lyca Productions நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில், Tamilkumaran Productions Pvt Ltd மற்றும் Pasanga Productions இணைந்து தயாரிக்கின்றன. ஒளிப்பதிவை ஜார்ஜ் C. வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளராக Foxn அறிமுகமாகிறார்.

திரில்லரும் நகைச்சுவையும் கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள “பரிமளா & கோ”, ரசிகர்களுக்கு ஒரு புதுமையான மற்றும் சுவாரஸ்யமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Ananthika SanilkumarJayaramMysskinParimala and CoSandysanjana krishnamoorthySantosh SobhanTamilkumaranUrvasiYogi Babu