திரைப்படத் தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். ‘தியாகராஜா டாக்கீஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
திரைப்படத் துறையில் புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனத்தின் தொடக்க விழாவில் திரையுலகைச் சேர்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் பிரசன்னா இயக்குகிறார். படத்தின் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
விழாவில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையிலான புரிதலும், முறையான திட்டமிடலும் திரைப்படத் தயாரிப்பில் மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்டார். மேலும், ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனம் எதிர்காலத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து, பல புதிய இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வாழ்த்தினார்.
நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி., தியாகா குறிஞ்சிசெல்வன் தனக்கு நண்பர் மட்டுமல்ல, சகோதரர் போன்றவர் எனக் குறிப்பிட்டதுடன், அவரது புதிய முயற்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்றார். மேலும், தனது அக்கா மகனுக்காக அவர் இந்தப் படத்தைத் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.
டாக்டர் ஐசரி கே. கணேஷ் பேசும்போது, தனது தந்தையின் பெயரில் ‘வேல்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தைத் தொடங்கியதைப் போல, தியாகா குறிஞ்சிசெல்வன் தனது தந்தையின் பெயரை நினைவுகூரும் வகையில் ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனத்தைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். புதிய தயாரிப்பாளர்கள் திரைப்படத் தயாரிப்பில் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகத் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, தியாகா குறிஞ்சிசெல்வனுடனான தனது நீண்டகால நட்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். பல ஆண்டுகளாக தனக்கு உறுதுணையாக இருந்து வரும் அவர், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் என்றும், தற்போது திரைப்படத் தயாரிப்பில் இறங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனத்தின் முதல் படத்தில் தனது உதவியாளர் ஈஸ்வரியும் இணை இயக்குநராகப் பணியாற்றுவதாகக் கூறினார்.
- Advertisement -
நடிகர் சூரி, தியாகா குறிஞ்சிசெல்வனுக்கு திரையுலகைச் சேர்ந்த பலருடனும் நல்ல நட்பு இருப்பதாகக் கூறினார். அவரது அன்பும் நட்பும் காரணமாகவே இத்தனை பேர் இந்த விழாவில் ஒன்றிணைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனம் முதல் படத்தில் இருந்து தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தயாரிக்க வேண்டும் என வாழ்த்தினார்.
நடிகர் ஜெய் பேசுகையில், தயாரிப்பாளர் தியாகா குறிஞ்சிசெல்வனுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், “குறிஞ்சிசெல்வன் என்றாலே எனக்கு ஜப்பான் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரை ‘ஜப்பான் குறிஞ்சி’ என்று அழைக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் நல்ல மனம் கொண்டவர். அவரது தயாரிப்பில் முதல் படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி” என்றார்.
மேலும், படத்தை ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாக்க படக்குழுவினர் கடுமையாக உழைத்து வருவதாகவும், படம் சிறப்பாக வெளியாக அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ஜெய் கேட்டுக்கொண்டார்.
இயக்குநர் பிரசன்னா பேசுகையில், இப்படத்தைத் திட்டமிட்டபடி சிறப்பாக உருவாக்க தனது 100 சதவீத உழைப்பையும் வழங்குவேன் என்றும், படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் தியாகா குறிஞ்சிசெல்வன், தனது பெற்றோர் மற்றும் குருநாதருக்கு நன்றி தெரிவித்தார். தனது மனைவி டாக்டர் விஜயலட்சுமி இந்தப் பயணத்தில் முக்கிய பங்கு வகித்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், திரைப்படத் தயாரிப்பில் உள்ள சவால்கள் குறித்து பலரும் வழங்கிய ஆலோசனைகளை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுவேன் என்று தெரிவித்த அவர், “தவறுகள் ஏற்பட்டாலும், எதிர்பார்த்தபடி படம் அமையாவிட்டாலும், எங்களைக் கைவிடாமல் வழிகாட்டுவதற்கும், எங்கள் கைகளைப் பிடித்து முன்னே அழைத்துச் செல்வதற்கும் இவ்வளவு பெரிய நண்பர்கள் பட்டாளம் பின்னால் இருக்கிறது என்ற நம்பிக்கைதான் இந்த முயற்சியில் இறங்குவதற்கான மிகப்பெரிய பலம்” என்றார்.
தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களை உருவாக்க வேண்டும் என்றும், திரையுலகினரின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து தங்களுக்கு இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனத்தின் முதல் படத்தில் ஜெய் நடிப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.