முதல்வர் விஜய் பெயரில் சிறப்பு விருது அறிவிப்பு!

2025-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற 18-வது எடிசன் திரைப்பட விருதுகள் 2026 விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட திரையுலகப் பிரபலங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் பெற்று கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் மலேசிய துணை அமைச்சர் ராமராஜ், ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் தூதர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

விழாவின் முக்கிய அறிவிப்பாக, தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய சிறப்பு விருது அறிமுகப்படுத்தப்படுவதாக எடிசன் விருதுகளின் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல் இந்த விருது எடிசன் திரைப்பட விருதுகளின் ஒரு நிரந்தர பிரிவாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

மேலும், உலகளாவிய அளவில் எடிசன் விருதுகளை விரிவுபடுத்தும் நோக்கில் ‘எடிசன் மில்லியனரி கிளப்’ என்ற புதிய முயற்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதிலுமுள்ள தொழிலதிபர்கள் மற்றும் வணிகத் தலைவர்களை இணைக்கும் தளமாக இது செயல்படும் என்றும், தமிழ் சினிமாவை சர்வதேச அரங்கில் மேலும் உயர்த்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் முக்கிய விருதுகளில், ‘பைசன்’ திரைப்படத்திற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதையும், மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர் விருதையும் பெற்றனர். ‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்திற்காக ரியோ ராஜ் சிறந்த பொழுதுபோக்கு நடிகராக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னணிப் பாடகர்கள் பிரிவில், ‘டிராகன்’ திரைப்படத்தின் ‘வழித்துணையே’ பாடலுக்காக சஞ்சனா கல்மன்ஜே சிறந்த பெண் பாடகி விருதையும், ‘மதராசி’ திரைப்படத்தின் ‘தங்கப்பூவே’ பாடலுக்காக ரவி ஜி சிறந்த ஆண் பாடகர் விருதையும் வென்றனர்.

‘மாமன்’ திரைப்படத்திற்காக ஸ்வாசிகா சிறந்த கதாபாத்திர நடிகை விருதைப் பெற்றார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக விஜய் வேலுக்குட்டி சிறந்த எடிட்டராகவும், அர்ஜுன் தாஸ் சிறந்த வில்லன் நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இளம் திறமைகளில், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்திற்காக பவிஷ் நாராயண் சிறந்த அறிமுக நடிகராகவும், ‘சிறை’ திரைப்படத்திற்காக அனிஷ்மா அனில்குமார் சிறந்த அறிமுக நடிகையாகவும் கௌரவிக்கப்பட்டனர்.

ஜூரி விருதுகள் பிரிவில், மூத்த நடிகர் டத்தோ ராதாரவி வாழ்நாள் சாதனையாளர் விருது, பாடகி சைந்தவி ‘தி வாய்ஸ் பியாண்ட் பவுண்டரிஸ்’ விருது, நாட்டுப்புறக் கலைஞர் அந்தோணி தாசன் ‘வாய்ஸ் ஆஃப் டிரடிஷன்’ விருது மற்றும் நடிகர் தம்பி ராமையா ‘வெட்ரன் பெர்ஃபார்மர்’ விருதுகளை பெற்றனர். நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது சமீபத்திய படங்களுக்காக டைனமிக் பெர்ஃபார்மர் விருது பெற்றார்.

தமிழ் திரையுலக சாதனைகளை கொண்டாடிய இந்த ஆண்டின் எடிசன் திரைப்பட விருதுகள் விழா, புதிய விருதுகள் மற்றும் சர்வதேச முயற்சிகள் மூலம் தமிழ் சினிமாவின் உலகளாவிய பயணத்திற்கு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

Chief Minister Vijayvijayமுதல்வர் விஜய்விஜய்