மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணையும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படமான #RC17 #RC2Sukku, இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தொடக்க விழாவில் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மெகாஸ்டார் சிரஞ்சீவி, படத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கிளாப்ஸ் அடித்தார். மேலும், தில் ராஜுவுடன் இணைந்து படத்தின் திரைக்கதையைப் படக்குழுவினரிடம் வழங்கினார். டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். விழாவில் கலந்துகொண்ட இயக்குநர்களும் முதல் காட்சியை இயக்கினர்.
இதற்கு முன்பு ராம் சரண் – சுகுமார் கூட்டணியில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால், புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- Advertisement -
இப்படத்தில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் ராம் சரணை இயக்குநர் சுகுமார் காட்டவுள்ளதாகக் கூறப்படுகிறது. நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர், விஜய பிரசாத் பண்ட்ரெட்டி மற்றும் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். பான் இந்தியா அளவில் மிகப்பெரிய பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாக்கப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் நீலம், பச்சை மற்றும் தங்க நிறங்களின் கலவையில் பிரம்மாண்டமான மயில் தோகை இடம்பெற்றுள்ளது. அதன் பின்னணியில் ராம் சரணின் முகம் இடம்பெற்றுள்ள விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், போஸ்டரில் இடம்பெற்றுள்ள ‘YOU CAN IMAGINE’ என்ற வாசகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.