கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ பூஜையுடன் தொடக்கம்

இந்திய சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையும் மிகப்பெரிய திரைப்படமான ‘தர்மன்’ அதிகாரப்பூர்வமாக இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த ஐந்து தசாப்தங்களாக இந்திய சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் நட்பு அனைவரும் அறிந்த ஒன்று. அந்த நட்பின் அடுத்த கட்டமாக உருவாகும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஒரு கூட்டணியாக பார்க்கப்படுகிறது.

46 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான திரைப்படங்களை வழங்கி வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இளம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இந்தப் படத்தை இயக்குகிறார். உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

படத்தில் முன்னணி நடிகை சிம்ரன் மற்றும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ராஷி கன்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும், தேசிய விருது பெற்ற சண்டைப் பயிற்சியாளர்களான அன்பரிவ், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் ராஜ்குமார், படத்தொகுப்பாளர் பிரதீப் இ. ராகவ், கலை இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தில் பணியாற்றுகின்றனர். இணை தயாரிப்பாளராக டிஸ்னி நிறுவனமும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகும் ‘தர்மன்’ திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணி, அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கம், அனிருத்தின் இசை என பல்வேறு அம்சங்களால் ‘தர்மன்’ திரைப்படம் தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Ashwath MarimuthuDharmanKamal HaasanRajinikanthRajinikanth Joins Hands with Kamal Haasan's RKFI for 'Dharman'