‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் பொங்கல் பண்டிகையில் ரிலீஸாவதில் எந்த மாற்றமும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இது குறித்த தகவல் வருமாறு:
அஜித்குமார் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆரவ் ஆகியோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது விடாமுயற்சி படத்திற்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள்பரவின.
விடாமுயற்சி திரைப்படத்தின் டீசரை பார்க்கும்போதே, இப்படம் ‘பிரேக் டவுன்’ என்ற ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான் என தெரியவந்துள்ளது. 1997-ம் ஆண்டு வெளியான பிரேக் டவுன் படத்தை தான் விடாமுயற்சி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கின்றனர் என்பது கிட்டத்தட்ட உறுதியானது.
இதைத்தொடர்ந்து, பிரேக் டவுன் படக்குழுவிடம் முறையான அனுமதியை விடாமுயற்சி டீம் பெறவில்லை என்பதால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், பிரேக் டவுன் படக்குழு விடாமுயற்சி படக்குழுவிடம் ரூபாய் 150 கோடி கேட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது.
இதனால், விடாமுயற்சி படத்திற்கு சிக்கல் எழுந்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால், இந்த தகவலை தயாரிப்பாளர் தனஞ்சயன் முற்றிலும் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது,
இந்த தகவல் வெளியானதும், நான் படக்குழுவை தொடர்புகொண்டு பேசினேன். அதற்கு அவர்கள், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது, தாய்லாந்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.
ஜனவரி 10-ம் தேதி இப்படம் கண்டிப்பாக வெளியாகும். இதெல்லாம் வெறும் வதந்தி தான் என அவர்கள் சொன்னதாக தனஞ்சயன் தெரிவித்திருக்கின்றார். இவர் கூறிய பிறகு அஜித் ரசிகர்களின் குழப்பம் நீங்கியுள்ளது. இனியென்ன ‘தல’ பொங்கல் கொண்டாட்டம் தான்..!