ஹாலிவுட் ஸ்டார் ஏஞ்சலினா ஜோலியுடன் இணையும் பிரியங்கா சோப்ரா: ரசிகர்கள் உற்சாகம்!

உலகளவில் புகழ்பெற்ற இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா, மீண்டும் இந்திய சினிமாவுக்குத் திரும்பியிருக்கும் அதே வேளையில், ஹாலிவுட்டில் ஒரு மிகப்பெரிய புராஜெக்ட்டில் கமிட்டாகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரம் ஏஞ்சலினா ஜோலியுடன் இணைந்து அவர் புதிய படம் ஒன்றில் பணியாற்றவுள்ளார்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய சினிமாவில் என்ட்ரி

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘வாரணாசி’ மூலம், சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவுக்குத் திரும்பியுள்ளார். இத்திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் மலையாள முன்னணி நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மீரா நாயர் இயக்கத்தில் உருவாகும் ‘அம்ரி’ உள்ளிட்ட சில இந்தியப் படங்களிலும் பிரியங்கா நடித்து வருகிறார்.

ஏஞ்சலினா ஜோலியுடன் புதிய புராஜெக்ட்!

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தன்னை எப்போதும் ஊக்கப்படுத்தும் ஹாலிவுட் நடிகைகளாக ஏஞ்சலினா ஜோலி, பெனிலோப் குரூஸ் மற்றும் சல்மா ஹயெக் ஆகியோரைக் குறிப்பிட்ட பிரியங்கா, அதில் ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார்.

நடிகை ஏஞ்சலினா ஜோலியுடன் இணைந்து ஒரு புதிய புராஜெக்ட்டில் தான் பணியாற்றவிருப்பதை அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

“இப்போது அதைப் பற்றி எதையும் விரிவாகச் சொல்ல இயலாது.” — பிரியங்கா சோப்ரா

இது திரைப்படமா அல்லது வெப் தொடரா என்பது குறித்த எந்தவொரு கூடுதல் விவரங்களையும் அவர் தற்போதைக்கு வெளியிடவில்லை. எனினும், சமகாலத்தின் இரு பெரும் சர்வதேச நட்சத்திரங்கள் இணையவிருக்கும் இந்த அறிவிப்பு உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Angelina JoliePriyanka Chopra