சமூக மாற்றத்திற்கான அங்கீகாரம்: டெல்லி தமிழ் சங்க விருது பெற்ற ‘நந்தன்’ படக்குழு!

சமூக நீதியை வலியுறுத்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படமாக நடிகர் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படத்தை டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவித்துள்ளது. இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் 2024-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், தலித் பஞ்சாயத்து தலைவர்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் நிர்வாக சவால்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

பதவியில் இருந்தாலும் உரிய அதிகாரங்களையும் அங்கீகாரத்தையும் பெற முடியாமல் போராடும் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் நிஜ வாழ்க்கை அனுபவங்களை ‘நந்தன்’ திரைப்படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. குறிப்பாக, படத்தின் இறுதியில் பல தலித் பஞ்சாயத்து தலைவர்கள் தங்களது வேதனைகளை நேரடியாக பகிர்ந்த காட்சிகள் தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.

திரைப்படம் வெளியான பிறகு சமூக நீதியை மையமாகக் கொண்ட அதன் கருத்து பல தரப்பினரின் பாராட்டைப் பெற்றது. திரைத்துறையில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பாராட்டிய நிலையில், அரசியல் தலைவர்களான திருமாவளவன், அண்ணாமலை, சீமான், அன்புமணி ராமதாஸ் மற்றும் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரும் படத்தின் கருத்தை வரவேற்றனர்.

மேலும், படம் வெளியான பின்னர் தமிழகத்தில் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் சுதந்திரமாக தேசியக் கொடியேற்றவும், அவர்களுக்குரிய நிர்வாக அதிகாரங்களை உறுதிப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்தது. கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மாநிலம் முழுவதும் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் தேசியக் கொடியேற்றிய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனை பலரும் ‘நந்தன்’ திரைப்படம் ஏற்படுத்திய சமூக விழிப்புணர்வின் விளைவாகக் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், சமூக மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படமாக ‘நந்தன்’ படத்தைத் தேர்வு செய்த டெல்லி தமிழ்ச் சங்கம், நடிகர் சசிகுமார் மற்றும் இயக்குநர் இரா.சரவணன் ஆகியோருக்கு சிறப்பு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தது.

கடந்த ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய கலாச்சார அமைச்சக இயக்குநர் Shah Faesal சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டெல்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சத்யா அசோகன், இணைத் தலைவர் மகேந்திரன், தயாரிப்பாளர் சிவா மற்றும் சங்க நிர்வாகிகள் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய ஷா பைசல், “தமிழ் திரைப்படங்கள் சமூகத்தை பிரதிபலிக்கும் சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கின்றன. நல்ல திரைப்படங்களை கொண்டாடுவது சமூக வளர்ச்சிக்கும் விழிப்புணர்வுக்கும் அவசியமானது” என்று தெரிவித்தார்.

டெல்லி தமிழ்ச் சங்க இணைத் தலைவர் மகேந்திரன் பேசுகையில், “‘நந்தன்’ போன்ற திரைப்படத்தில் நடிக்க தனி தைரியம் தேவை. சசிகுமார் சமூக அக்கறையுடன் அந்த கதாபாத்திரத்தை உயிர்ப்பித்துள்ளார். கமல்ஹாசனுக்கு ‘சப்பாணி’ எப்படி ஒரு அடையாளமோ, அதேபோல் சசிகுமாருக்கு ‘நந்தன்’ ஒரு முக்கியமான அடையாளமாக இருக்கும். இந்தப் படத்திற்கு இன்னும் பல விருதுகள் கிடைக்கும்” என்றார்.

நிகழ்வில் பேசிய சசிகுமார், “‘நந்தன்’ திரைப்படத்திற்காக நான் பட்ட அனைத்து சிரமங்களையும் டெல்லி மக்களின் பாராட்டு மறக்க வைத்துவிட்டது. படம் வெளியான பிறகு ஒரு பெண் பஞ்சாயத்து தலைவர் என் கைகளைப் பிடித்து அழுதபடி நன்றி கூறினார். அந்த உணர்வு எந்த தேசிய விருதுக்கும் சமமானது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இயக்குநர் இரா.சரவணன் பேசுகையில், “தமிழ் மக்களின் வாழ்க்கையுடன் சினிமா ஆழமாக கலந்திருக்கிறது. அதனால்தான் சமூக மாற்றத்திற்கான கருவியாகவும் அது செயல்படுகிறது. ‘நந்தன்’ படத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம், இனி மேலும் பொறுப்பான படைப்புகளை உருவாக்க ஊக்கமளிக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியின் நிறைவில், சமூக மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படமாக ‘நந்தன்’ தேர்வு செய்யப்பட்டு சசிகுமார் மற்றும் இரா.சரவணன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், இளம் தலைமுறையினரும் இப்படத்தின் சமூகப் பார்வையை அறிந்துகொள்ளும் வகையில், வரும் வாரத்தில் ‘நந்தன்’ திரைப்படத்தை சிறப்பு திரையிடலாக நடத்த டெல்லி தமிழ்ச் சங்கம் திட்டமிட்டுள்ளது.

'Nandhan' Team Honoured with Delhi Tamil Sangam AwardEra SaravananNandhanSasikumar