சசிகுமாரின் வதந்தி வெப் சீரிஸ் சீசன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் தொடரான ‘வதந்தி’யின் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகத் தயாராகியுள்ளது. ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த 8 எபிசோடுகள் கொண்ட தொடரை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர்.

மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் த்ரில்லரில் சசிகுமார், நேர்மையான காவல் அதிகாரியான எஸ்.ஐ. மூசா ரஸா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மதுரையின் கலாச்சார பின்னணியுடன் ஜல்லிக்கட்டு திருவிழாவின் பரபரப்பையும் கதையுடன் இணைத்துள்ள இந்த சீசன், ‘வதந்தி vs உண்மை’ என்ற தொடரின் மையக்கருவை மேலும் ஆழமாக எடுத்துச் செல்கிறது.

நெடுஞ்சாலை திட்டத்தின் தொடக்க விழாவின்போது எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இதுகுறித்த விசாரணையில் இறங்கும் மூசா ரஸா, ‘மணி’ என்ற மர்மமான கைதியை நோக்கிச் செல்லும் எதிர்பாராத தடயங்களை கண்டுபிடிக்கிறார். அரசியல் அழுத்தம், ஊடக பரபரப்பு மற்றும் மனிதர்களின் பலவீனங்களுக்கு மத்தியில் உண்மையை வெளிக்கொணர அவர் மேற்கொள்ளும் போராட்டமே தொடரின் மையக்கதையாக அமைந்துள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளுடன், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்தத் தொடர் வெளியாகிறது.

‘வதந்தி’ முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, புதிய கதைக்களம் மற்றும் வலுவான கதாபாத்திரங்களுடன் உருவாகியுள்ள ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Prime Video Announces August 7 as the Global Premiere of Vadhandhi Season TwoSasikumarVadhandhi Season 2Vadhandhi Season Two