விரைவில் வெளியாகும் மர்மம் நிறைந்த ‘அரூபி’!

மலையாளத்தில் உருவாகியுள்ள திகில்-மர்மத் திரைப்படமான ‘அரூபி’யின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஊடகத்தினர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

“சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது…” என்ற வரியுடன் தொடங்கும் டிரெய்லர், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தை விறுவிறுப்பாக வெளிப்படுத்துகிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் காட்சியமைப்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அபிலாஷ் வாரியர், “இந்த படம் மொழிகளைத் தாண்டி அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ளது. எங்கள் தொழில்நுட்பக் குழுவின் அர்ப்பணிப்பே இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். மீதியை திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம்,” என்றார்.

தயாரிப்பாளர் பிரதீப் ராஜ், “புதிய திறமைகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தை தயாரித்தேன். கதையின் மீது இருந்த நம்பிக்கையே இந்த முயற்சிக்குக் காரணம். ‘அரூபி’ ரசிகர்களிடம் நிச்சயம் விவாதிக்கப்படும் படமாக இருக்கும்,” என தெரிவித்தார்.

ஹீரோ விஷாக் ரவி, “இது எனது முதல் ஹீரோ படம். இந்தக் கதையை உருவாக்க சுமார் 10 ஆண்டுகள் எடுத்தது. நல்ல உள்ளடக்கம் கொண்டதால் மலையாளத்துடன் தமிழிலும் வெளியிட முடிவு செய்தோம். ரசிகர்கள் திரையரங்கில் வந்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.

நடிகைகள் நேஹா சாவ்லா மற்றும் சாக்ஷி படாலா, மொழி சவாலாக இருந்தாலும், இப்படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்ததாக தெரிவித்தனர். குறிப்பாக 300 ஆண்டுகள் பழமையான வீட்டில் படப்பிடிப்பு நடைபெற்றது தங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக கூறினர்.

நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர்கள் சம்பத் ராம், அசோக், விண்செண்ட் அசோகன், இசையமைப்பாளர்-இயக்குநர் எஸ்.எஸ். குமரன், விநியோகஸ்தர் ராகவா ராம் உள்ளிட்டோர், படத்தின் டிரெய்லரை பாராட்டி, ‘அரூபி’ மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தனர்.

‘அரூபி’ திரைப்படத்தில் விஷாக் ரவி, நேஹா சாவ்லா, சாக்ஷி படாலா, ஜாய் மேத்யூ, சிந்து வர்மா, கண்ணன் சாகர், விஜுபால், கிரண் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அபிலாஷ் வாரியர் இயக்கியுள்ள இப்படத்தை பிரதீப் ராஜ் தயாரித்துள்ளார். மர்மம், திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த இந்த திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

AroopiMystery Thriller Aroopi Releasing Soon