கனவு திட்டத்தை அறிமுகப்படுத்திய சாக்‌ஷி அகர்வால்

பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவை நனவாக்கிய சாக்ஷி அகர்வால்… ‘OKUU’ பிரீமியம் நியூட்ரிஷன் பிராண்டை அறிமுகப்படுத்தினார்!

நடிகை சாக்ஷி அகர்வால், தனது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் (Performance Nutrition) நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல், தொழில்முனைவோராகவும் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.

‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான சாக்ஷி அகர்வால், உடல்தகுதி மற்றும் ஆரோக்கியத்தில் கொண்டிருந்த ஆர்வத்தை தொழில்முயற்சியாக மாற்றியுள்ளார்.

5 ஆண்டுகள் ஆராய்ச்சி… 551 முறை தயாரிப்பு மாற்றம்

‘OKUU’ பிராண்டை உருவாக்க கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் பணிகளில் சாக்ஷி அகர்வால் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். குறிப்பாக இறுதி 11 மாதங்களில் மட்டும் 551 முறை தயாரிப்பு கலவையில் மாற்றங்களை செய்து, தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப தரமான தயாரிப்பை உருவாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

விளம்பரத் தூதராக அல்ல… தயாரிப்பாளராக சாக்ஷி

பொதுவாக பிரபலங்கள் ஏற்கனவே உள்ள பிராண்டுகளுக்கு விளம்பரத் தூதர்களாக செயல்படும் நிலையில், சாக்ஷி அகர்வால் தனது பெயரை மட்டும் இணைப்பதற்குப் பதிலாக, தரமான ஊட்டச்சத்து தயாரிப்பை நேரடியாக உருவாக்க முடிவு செய்துள்ளார். தயாரிப்பின் தேவையை கண்டறிவது முதல் அதன் தரம், கலவை மற்றும் நிறுவனத்தின் நோக்கம் வரை அனைத்து கட்டங்களிலும் அவர் நேரடியாக பங்கேற்றுள்ளார்.

‘OKUU’வில் என்ன சிறப்பு?

‘OKUU’ என்பது தாவர அடிப்படையிலான (Plant-Based) பிரீமியம் புரோட்டீன் பார் ஆகும். இதில் 35 கிராம் புரோட்டீன், 14 கிராம் நார்ச்சத்து மற்றும் 6 கிராம் கொலாஜன் இடம்பெற்றுள்ளதுடன், சர்க்கரை, தேவையற்ற ரசாயனங்கள் மற்றும் செயற்கை சேர்மங்கள் சேர்க்கப்படவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சாக்ஷி அகர்வால் கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளாக நடிகை வாழ்க்கையுடன் இணைந்து ‘OKUU’ உருவாக்கும் பணியிலும் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்தேன். இது ஒரு பிரபலத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட பிராண்ட் அல்ல. இந்திய மக்களுக்கு தரமான ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இது உருவானது. பல ஆண்டுகளாக நான் கண்ட கனவை இன்று அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.

‘OKUU’ அறிமுகத்தின் மூலம், நடிகை சாக்ஷி அகர்வால் இந்தியாவின் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதுடன், நடிகையாகவும் தொழில்முனைவோராகவும் தனது பயணத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.

Sakshi AgarwalSakshi Agarwal Unveils 5 Year Dream Project on Her Birthdayசாக்ஷி அகர்வால்