பான் இந்திய அளவில் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர்களான நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடிக்க இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் முழு படக்குழுவும் காட்டிய அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளனர். முதல் படமாக இருந்தாலும் அனுபவமிக்க இயக்குநரின் முதிர்ச்சியுடன் அவர் பணியாற்றியதாகவும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.
இயக்குநர் ராஜா கருப்பசாமி, தனது கதையை நம்பி முழுமையான படைப்புச் சுதந்திரம் வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவின் கடின உழைப்பால் படப்பிடிப்பு சிறப்பாக நிறைவடைந்ததாகக் கூறிய அவர், தற்போது பின்னணிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் படத்தை ரசிகர்களிடம் கொண்டு வர ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக சுரேந்திரன் பரஞ்சோதி, படத்தொகுப்பாளராக அசோக் அர்ஜுனன், இசையமைப்பாளராக பரத் சங்கர், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, கலை இயக்குநராக ஏ. பாலுமகேந்திரா மற்றும் விளம்பர வடிவமைப்பாளராக வியாகி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.