10 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ‘மேயாத மான்’ பார்ட் 2!

வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘மேயாத மான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘மேயாத மான் 2’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

2017-ல் வெளியான ‘மேயாத மான்’ திரைப்படம் காதல், நகைச்சுவை மற்றும் இசையை மையமாகக் கொண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வெளியாகி ஏறக்குறைய 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இது குறித்து இயக்குநர் ரத்னகுமார் கூறுகையில், ‘மேயாத மான்’ வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் ‘ஆடை’, ‘குலுகுலு’, ‘29’ உள்ளிட்ட படங்களை இயக்கியதுடன், லோகேஷ் கனகராஜுடன் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களிலும் எழுத்துப் பணியில் ஈடுபட்டேன்.

எங்கு சென்றாலும் பலர் ‘மேயாத மான்’ திரைப்படம் தங்களுக்கு மிகவும் பிடித்த படம் என்றும், அதேபோன்ற படம் அல்லது இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்றும் கேட்டு வந்தனர். ஆனால், அதே கதையமைப்பை மீண்டும் உருவாக்குவதில் எனக்கு ஆர்வம் இல்லாமல் இருந்தது. ‘29’ திரைப்படம் வெளியான பிறகு, அதில் இடம்பெற்ற சம்பவங்கள் தங்களது வாழ்க்கையிலும் நிகழ்ந்ததாகப் பலர் பகிர்ந்து கொண்டனர். மேலும், படம் தொடர்பாக கிடைத்த பல்வேறு அனுபவங்களும் தகவல்களும் ‘மேயாத மான் 2’ உருவாக்கும் எண்ணத்தைத் தூண்டின.

இதன் தொடர்ச்சியாகப் பணிகளைத் தொடங்கியபோது, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மட்டும் இல்லாமல், புதிய கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இசையும் பாடல்களும் இப்படத்தில் முக்கியத்துவம் பெறும் எனத் தெரிவித்தார்.

‘மேயாத மான் 2’ படத்தில் வைபவ் மீண்டும் தனது கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் மதுவாகவும், இந்துஜா சுடராகவும் நடிக்கின்றனர். விவேக் பிரசன்னா வினோத் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், புதிய கதாபாத்திரங்களும் இப்படத்தில் இடம்பெறவுள்ளன.

- Advertisement -

இது வழக்கமான இரண்டாம் பாகமாக இல்லாமல், தனித்துவமான கதையுடன் உருவாகும் திரைப்படமாக இருக்கும் என்றும், கதாபாத்திரங்கள், இசை மற்றும் கதைக்காக ரசிகர்களிடம் மறக்க முடியாத படமாக அமையும் என்றும் இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த முறை ஸ்டோன் பென்ச் மற்றும் ஜி ஸ்குவாட் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. ‘மேயாத மான்’ முதல் பாகத்தை ஸ்டோன் பென்ச் நிறுவனம் மட்டும் தயாரித்திருந்த நிலையில், தற்போது இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இந்தக் கூட்டணி ‘29’ திரைப்படத்திலிருந்தே தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் உருவானதாக ரத்னகுமார் குறிப்பிட்டார்.

மேலும், ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் தலைவர் பிரதீப் பூபதியும் இப்படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளார். அவருடைய பங்களிப்பு இல்லாமல் இந்தத் திரைப்படம் தொடங்கியிருக்காது என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார். படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மேயாத மான் 2’ திரைப்படத்தை அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறுகையில், ‘மேயாத மான்’ தனது முதல் திரைப்படம் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் 20 திரைப்படங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ‘மேயாத மான் 2’ தான் தனது தயாரிப்பில் உருவாகும் 22-வது திரைப்படம் எனத் தெரிவித்த அவர், ஜி ஸ்குவாட் மற்றும் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

இது நல்ல சகாப்தத்தின் தொடக்கம் என்றும், ‘Fun Returns’ என உற்சாகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Meiyadha Maan Part 2Meiyadha Maan Part 2 to be Made After 10 Years