மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘மாகாளி’ பூஜையுடன் தொடக்கம்!

தமிழ் சினிமாவில் சமூக அக்கறை கொண்ட தனித்துவமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் புதிய திரைப்படம் ‘மாகாளி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, மாரி செல்வராஜின் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். சமூகத்தின் முக்கியமான ஒரு பிரச்சினையை அழுத்தமாகவும் தாக்கமிக்க வகையிலும் பேசும் படைப்பாக ‘மாகாளி’ உருவாகி வருகிறது.

இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் K. கருணாமூர்த்தி, நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

மனித வாழ்வின் வலி, எல்லைகள் மற்றும் ஆழமான சமூக அக்கறையை மையமாகக் கொண்ட அழுத்தமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகி வருகிறது.

படக்குழு வெளியிட்டுள்ள முதல் போஸ்டரில், பிரம்மாண்டமான விலங்கின் எலும்புக்கூட்டுக்குள் அமீர் தனிமையில் நடந்து செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. இரண்டாவது போஸ்டரில், எங்கும் சிதறிக் கிடக்கும் விலங்குகளின் எலும்புக்கூடுகளுக்கு நடுவே ‘மாகாளி’ என்ற தலைப்பு இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

இப்போஸ்டர்கள் படத்தின் இருண்ட மற்றும் ஆழமான பின்னணியை உணர்த்துவதுடன், வெறுமை, அழிவு, இயற்கையின் வலி மற்றும் சமூகத்தின் மறைக்கப்பட்ட யதார்த்தம் என பல்வேறு அடுக்குகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் அமீருடன் சுவாசிகா, அனிஷ்மா அனில்குமார், ஹரிஹரன், அஸ்வின் ராம், லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்திற்கு செல்வரத்தினம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா RK படத்தொகுப்பையும், ஜஸ்டின் பிரபாகரன் இசையையும் கவனிக்கின்றனர். ராமு தங்கராஜ் கலை இயக்குநராகவும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியாளராகவும், வர்ஷினி சங்கர் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

மேலும், சுரேன் ஜி மற்றும் அழகிய கூத்தன் ஒலி வடிவமைப்பு, கபிலன் விளம்பர வடிவமைப்பு, ஜெய்குமார் வைரவன் நிழற்படம், நாகேந்திரன் ஒப்பனை ஆகிய பணிகளை மேற்கொள்கின்றனர். வெங்கட் ஆறுமுகம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், சதிஷ் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றுகின்றனர்.

படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில், ‘மாகாளி’ திரைப்படம் குறித்த மேலும் பல தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AmeerAnishma AnilkumarAravinth SBMaakaaliMaakaali Begins with a Pooja Ceremony Mari Selvaraj - Ameer Join HandsMari Selvaraj