மாஸாக வலம் வரும் ஹீரோ கார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ படம் அனைவரின் பாராட்டு மற்றும் வசூல் மழையுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தனது 23-வது படத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். மேலும், இவரது 25-வது படம் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் அறிவோம்..
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் அவரது 22-வது படம். இந்த ஆண்டு இதுவரை இவரது நடிப்பில் 2 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. பொங்கலுக்கு அயலான் படமும் தீபாவளிக்கு அமரன் படமும் ரிலீஸ் ஆகியுள்ளது.
அமரன் படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து நல்ல லாபம் பெற்றிருக்கிறது. படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி, ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூபாய் 90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவிக்கையில், ‘தனது 100-வது படத்தில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்து, ‘புறநானூறு’ பணியாற்றப் போகிறேன். அந்தப் படம், ஏற்கனவே இருந்த பரிமாணத்தைவிட இன்னும் சிறப்பான இடத்திற்கு வந்துள்ளது.
அத்திரைப்படம் என்னுடைய இசையில் உருவாகின்ற 100-வது படமாகவும், இன்னொரு நடிகரின் 25-வது படமாகவும் இருக்கும்’ என தெரிவித்தார்.
ஆக, இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகின்றது’ என திரை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
புறமுதுகு காட்டாமல், புறநானூறும் வாகை சூடட்டும்.!