விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு தொடர்பாக தடைகளை சந்தித்து வருகிறது. இது பற்றிய வழக்கு விசாரணையில் நீதிமன்ற தீர்ப்பு நாளை மறுநாள் 27-ந்தேதி வெளியாகிறது. இதனை படக்குழு மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நிகழ்ந்த ஒரு திரைப்படத்தின் நிலையை பார்ப்போம்..
இயக்குநர் ஜே.பி.தத்தா இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படம் ‘பார்டர்’. 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா- பாகிஸ்தான் போர் பின்னணியில் உருவான திரைப்படம் இது. இப்படத்தில் சன்னி தியோல், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் 2-ம் பாகம் இப்போது உருவாகி இருக்கிறது. இதை அனுராக் சிங் இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்திருந்த சன்னி தியோலும் நடித்துள்ளார். வருண் தவண், தில்ஜித் தோசாஞ், அஹான் ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். அதிக எதிர்பார்ப்பைக் கொண்ட இப்படம் வெளியானது.
இந்நிலையில் ‘துரந்தர்’ படத்தைப் போல ‘பார்டர் 2’ படமும் வளைகுடா நாடுகளில் வெளியாகவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக இப்படத்தின் கதை இருப்பதாகக் கூறி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.